உசுரே - விமர்சனம்
01 Aug 2025
‘உசுரே’ ஒரு இளமை ததும்பும் காதல் கதையை மையமாகக் கொண்டு, சித்தூர் பகுதியின் பின்னணியில் நகரும் படம். டீஜெ, அப்பா-அம்மாவின் ஒரே மகனாக, அவர்களின் அளவு கடந்த பாசத்தில் வளர்ந்தவர். வேலை, நண்பர்களுடன் ஊர் சுற்றுதல் என அவரது வாழ்க்கை இனிமையாக செல்ல, அந்த ஊரில் புதிதாக குடியேறுகிறார் நாயகி ஜனனி. மந்த்ராவின் மகளான ஜனனி, அந்தத் தெருவில் அமைதியாக போவதும் வருவதுமாக இருக்கிறார். ஆனால், மந்த்ரா, தன் மகளை யாராவது தவறாக பார்த்தால் கோபப்படும் கண்டிப்பான தாய்.
நண்பர்களுடன் சவால் வைத்து, ஜனனியை ஒருதலைப்பட்சமாக காதலிக்கத் தொடங்குகிறார் டீஜய். ஆனால், இந்தக் காதல் மந்த்ராவிற்கு தெரிய வர, கதை எதிர்பாராத திருப்பங்களுடன் வேகமெடுக்கிறது. இவர்களின் காதல் இறுதியில் ஒன்றிணைந்ததா? இல்லையா? என்பதே ‘உசுரே’ படத்தின் மையக் கதை.
இயக்குநர் ஒரு எளிமையான காதல் கதையை, சித்தூரின் பின்னணியில் உணர்வுப்பூர்வமாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், முதல் பாதி மெதுவாகவும், ஒரே இடத்தில் நிற்பது போலவும் உணரவைக்கிறது. காதல் காட்சிகள் இன்னும் இயல்பாகவும், ஆழமாகவும் அமைந்திருந்தால், பார்வையாளர்களை முழுமையாக ஈர்த்திருக்கும். கிளைமாக்ஸில் வைக்கப்பட்ட எதிர்பாராத திருப்பம் படத்தின் மிகப்பெரிய பலம், ஆனால் அதுவரை பொறுமையாக பார்க்க வேண்டியது சற்று சோர்வை ஏற்படுத்துகிறது. திரைக்கதையில் சுறுசுறுப்பும், புதுமையும் சற்று கூடுதலாக இருந்திருக்கலாம்.
நாயகனாக டீஜெ, இளமையான தோற்றத்துடன் கதாபாத்திரத்தில் இயல்பாய் பொருந்துகிறார். சில காட்சிகளில் சிறப்பாக நடித்தாலும், சில இடங்களில் ஓவர் ஆக்டிங் தெரிகிறது. நடிப்பில் மேலும் மெருகேற்றினால், மிகப்பெரிய இடத்தை பிடிக்க முடியும். ஜனனி, அழகிலும் நடிப்பிலும் பளிச்சிடுகிறார். அவரது இயல்பான நடிப்பு காதல் காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது. ஆனால், எப்போதும் உம்மென்றே இருக்கிறார். மந்த்ரா, வித்தியாசமான கதாபாத்திரத்தில் தனது அனுபவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
டீஜெயின் நண்பர்களாக ஆதித்யா கதிர் மற்றும் தங்கதுரையின் நகைச்சுவை, படத்திற்கு கொஞ்சமாய் உற்சாகம் சேர்க்கிறது. அப்பா-அம்மாவாக கிரேன் மனோகர் மற்றும் செந்தில் குமாரி, உணர்வுப்பூர்வமான காட்சிகளில் சிறப்பாக ஸ்கோர் செய்கிறார்கள்.
சித்தூரின் இயல்பான தோற்றத்தை பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். காதல் மற்றும் உணர்வு காட்சிகளை படமாக்கிய விதம் பாராட்டுக்குரியது. பாடல்களும், பின்னணி இசையும் கதையுடன் ஒன்றி, படத்திற்கு கூடுதல் ஆகர்ஷணம் சேர்க்கின்றன. இருப்பினும், படத்தொகுப்பு இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கலாம், குறிப்பாக முதல் பாதியில்.
படத்தின் மிகப்பெரிய பலம், கிளைமாக்ஸில் உள்ள எதிர்பாராத திருப்பமும், ஜனனி மற்றும் டீஜய்யின் இயல்பான கெமிஸ்ட்ரியும். நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் படத்தை உயர்த்துகின்றன. ஆனால், முதல் பாதியின் மெதுவான வேகம் மற்றும் காதல் காட்சிகளில் புதுமையின்மை படத்தை சற்று பின்னோக்கி இழுக்கிறது. இயக்குநர் இந்த அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், படம் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
‘உசுரே’ ஒரு இளமையான காதல் கதையாக, உணர்வுப்பூர்வமான தருணங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும் கொண்டு பார்வையாளர்களை ஈர்க்க முயல்கிறது. சில குறைகள் இருந்தாலும், காதல் மற்றும் நகைச்சுவை ரசிகர்களுக்கு இது ஒரு இனிமையான ஒருமுறை பார்க்கத்தக்க படமாக அமைகிறது.
Tags: usurae, teejay, janani