ஹாரூண் இயக்கத்தில், கார்த்திக் ராஜா இசையமைப்பில், நட்டி, ஷில்பா மஞ்சுநாத், சுபப்ரியா மலர், சாஷ்வி பாலா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஷில்பா, சுபப்ரியா, சாஷ்வி ஆகிய மூவரும் நெருங்கிய தோழிகள். வேலையில் திறமைசாலிகளாக இருந்தாலும் எப்போது குடி, போதை என சுற்றுபவர்கள். உடன் வேலை பார்க்கும் தோழியின் திருமண பார்ட்டியில் நன்றாகக் குடித்துவிட்டு காரில் சென்றவர்களை கடத்திவிடுகிறார்கள். அவர்களை ஒரு பாழடைந்த வீட்டில் கட்டிப் போட்டு மிரட்டுகிறார் நட்டி. எதற்காக அவர்கள் கடத்தப்பட்டார்கள், நட்டி அவர்களை என்ன செய்தார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இன்றைய தலைமுறையில் ஒரு சிலர் இப்படி போதை, குடி, புகை என குடும்பத்தினரின் கவலைகளை புரிந்து கொள்ளாமல் சுற்றி வருகிறார்கள். அந்த போதைப் பழக்கத்தால் அவர்கள் குடும்பம் மட்டும் கவலையடையவில்லை, சுற்றியிருப்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்ற நல்ல கருத்தை இப்படத்தில் முன் வைத்திருக்கிறார் இயக்குனர் ஹாரூண். 

ஷில்பா உள்ளிட்ட தோழிகளை கடத்தி வைத்துக் கொண்டு அவர்களை மிரட்டோ மிரட்டென்று மிரட்டுகிறார் நட்டி. நான்கு சுவற்றுக்குள்ளேயே அவை நடப்பதாலோ என்னவோ அந்தக் காட்சிகளில் நாடகத்தனம் அதிகமாய் வெளிப்படுகிறது. அந்தக் கால வில்லன் போல வந்து பயமுறுத்துகிறார் நட்டி. பின்னர் அவர் கதாபாத்திரம் பற்றிய சஸ்பென்ஸ் உடைந்த பிறகே அவர் யதார்த்தமாய் மாறுகிறார்.

ஷில்பா, சுபப்ரியா, சாஷ்வி ஆகிய மூவரும் கிளாமர் கதாபாத்திரங்களில் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் குடி, போதை என அதிர்ச்சியடைய வைக்கிறார்கள். அதன்பின் நட்டியிடம் சிக்கிக் கொண்டு பயந்து நடுங்குகிறார்கள். போதையில் சிக்கிய ஆண்களைப் பற்றிய படங்களுக்கு மத்தியில் போதையில் சிக்கிய சில பெண்களைப் பற்றி ரசிகர்கள் தவிக்கும் அளவிற்கு சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை சுமார் என்ற அளவில்தான் இருக்கிறது. ஒரே ஒரு வீட்டில், நீளமான காட்சிகள் படத்தின் பெரும் பலவீனம். கிளைமாக்சில் எதிர்பார்க்காத திருப்பத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இன்னும் முயன்றிருந்தால் நல்ல படமாக வந்திருக்கும்.