மோகன் கோவிந்த் இயக்கத்தில், அருண் ராஜ் இசையமைப்பில், அசோக் செல்வன், பவித்ரா மாரிமுத்து மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2012ல் வெளிவந்த ‘பீட்சா’, தீபன் சக்கரவர்த்தி இயக்கத்தில் 2013ல் வெளிவந்த ‘பீட்சா 2, த வில்லா’ வரிசையில் இந்த ‘பீட்சா 3, த மம்மி’.

இந்த முறை ரெஸ்ட்டாரென்ட் ஒன்றில் வரும் பேய், அதனால் ஏற்படும் பாதிப்பு, அந்த பேய் ஏன் அங்கு வந்தது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

‘மம்மி’ வடிவில் உள்ள ஒரு சிறு பொம்மை எந்த இடத்திற்கு கை மாறுகிறதோ அந்த இடத்தில் உள்ள பேய்களை வரவழைத்துவிடும். அசோக் செல்வன் நடத்தி வரும் ரெஸ்ட்டாரென்டில் யாரோ அந்த மம்மி பொம்மையை தவறுதலாக விட்டுச்சென்றுவிட அங்கு ஒரு பேய் வந்துவிடுகிறது. அது மட்டுமல்ல அது வரும் போதெல்லாம் ஒரு அற்புதமான ஸ்வீட் ஒன்றைச் செய்கிறது. தனது ரெஸ்ட்டாரென்டில் உள்ள யாருமே அந்த ஸ்வீட்டைச் செய்யாத போது சிசிடிவி கேமரா வைத்து அதைச் செய்தது ஒரு பேய் எனக் கண்டுபிடிக்கிறார் அசோக் செல்வன். அந்தப் பேய் அங்கு ஏன் வந்தது, ஏன் ஸ்வீட் செய்கிறது என்பதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பழிவாங்கும் போய் என்ற வழக்கமான பேய்க் கதைதான். அதிகமான பயமுறுத்தல் இல்லாமல் ஒரு சஸ்பென்ஸ் க்ரைம் திரில்லர் படமாகத்தான் இப்படம் தெரிகிறது. 

பொன்னியின் செல்வன் கெட்டப்பில் வரும் அசோக் செல்வன் பேயைப் பார்த்து பயப்படாமல் அதை பொறுமையுடனே கையாள்கிறார். சீரியசாக, அமைதியாக இருக்கிறது அவரது நடிப்பு. அவரது காதலியாக பவித்ரா மாரிமுத்து, பேயைப் பற்றி மொபைல் ஆப் கண்டுபிடித்தவர், ஏதோ செய்யப் போகிறார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே.

இவர்கள் தவிர படத்தில் சில காட்சிகளில் வந்து போகும் கதாபாத்திரங்களில் அபி நட்சத்திரா, அனுபமா குமார், காளி வெங்கட், குரேஷி, கவிதா பாரதி, வீரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

பேய்ப் படம் என்றால் இருளான காட்சிகளும், பயமுறுத்தும் லைட்டிங்கும் இருக்கும், அதைச் சரியாகச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ். அருண் ராஜின் பின்னணி இசை பயத்தைக் கூட்ட முயற்சிக்கிறது. பேய்ப் படங்கள் என்றாலே அடுத்து என்ன, அடுத்து என்ன என பரபரப்பாக நகர வேண்டும். இந்தப் படம் மிக மெதுவாக நகர்வதே படத்திற்கான மைனஸ்.