பிரேம் ஆனந்த் இயக்கத்தில், ஆப்ரோ இசையமைப்பில், சந்தானம், சுரபி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

‘தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2’ வரிசையில் ‘தில்லுக்கு துட்டு 3‘ என வந்திருக்க வேண்டிய படம். அந்த டைட்டிலை பயன்படுத்த முடியாததால் ‘டிடி ரிட்டன்ஸ்’ என பெயர் வைத்துள்ளார்கள்.

இதுதான் சந்தானம் ஸ்டைல் என அவருடைய பாணியில் மீண்டும் ரிட்டன் ஆகி வந்திருக்கிறார் சந்தானம். ஆரம்பம் முதல் கடைசி வரை கலகலப்பாய் நகர்ந்து நம்மை சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கிறது படம். அறிமுக இயக்குனர் பிரேம் ஆனந்த் முதல் படத்திலேயே ‘டிடி’ ஆகவோ ‘பணம்’ ஆகவோ தயாரிப்பாளருக்கு வசூலை ரிட்டன் செய்யும் அளவிற்குப் படத்தைக் கொடுத்துவிட்டார்.

1960களில் சூதாட்டம் ஆட வந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை வஞ்சகமாகக் கொன்று பணத்தை சம்பாதிக்கிறார்கள் பிரதீப் ராவத் குடும்பத்தினர். அவருடைய குடும்பத்தினரையும், அந்த பங்களாவையும் ஊர் மக்களும், போலீசும் சேர்ந்து கொன்று அழிக்கிறார்கள். பல வருடங்களுக்குப் பிறகு அந்த வீட்டிற்குள் நுழைய வேண்டிய ஒரு சூழ்நிலை சந்தானத்திற்கு ஏற்படுகிறது. அவரது நண்பர்கள் அந்த வீட்டில் மறைத்து வைத்த பணத்தை எடுக்கவே அங்கு அவரும் நண்பர்களும் செல்கிறார்கள். ஆனால், பேயாக உலவி வரும் பிரதீப் ராவத்திடம் சிக்கி சூதாட்டம் ஆடினால்தான் தப்பிக்க முடியும் என்ற நிலையில் அதற்கு சம்மதிக்கிறார்கள். அதில் வெற்றி பெற்றார்களா, தப்பித்தார்களா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பேய் பங்களா, பேய்கள் என இருந்தாலும் பழி வாங்கும் கதையாக இல்லாமல் சிரிக்க வைக்கும் கதையாக இருப்பதால் நம்மை கவலைகளை மறந்து சிரிக்க வைக்கிறது படம். சந்தானம் தனக்கு மட்டுமான படமாக இதை நினைக்காமல் மற்றவர்களுக்கும் சரியான காட்சிகளைத் தந்து மொத்தமாக ரசிக்க வைக்க தன் இடத்தையும் விட்டுக் கொடுத்திருக்கிறார். அதற்கேற்றபடி மாறன், சேது என அவரது நண்பர்களும், வில்லன் பெப்ஸி விஜயன், அவரது மகன் ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும், இரண்டு கொள்ளைக் கூட்டங்களாக வரும் பிபின், மொட்டை ராஜேந்திரன் குழுவினரும் என ஆளாளுக்கு அவரவர் பங்கிற்கு சிரிக்க வைக்கிறார்கள். சந்தானத்திற்கு ஒரு ஜோடி இருந்தேயாக வேண்டும் என படத்தின் கதாநாயகியாக சுரபி.

ஆப்ரோ இசை, தீபக் குமார் பதி ஆகியோரது பங்களிப்பு படத்தில் குறிப்பிடும்படி அமைந்துள்ளது.

இந்த 2023ல் இதுவரையில் வெளிவந்த படங்களில் முழுமையாக சிரிக்க வைத்துள்ள ஒரே படம் இந்த ‘டிடி ரிட்டன்ஸ்’.