ரமேஷ் தமிழ் மணி இயக்கம் இசையமைப்பில், ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ள படம்.
தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களை அதிகம் கவர்ந்த கிரிக்கெட் வீரரான தோனி, தனி ஆவலுடன் தனது முதல் படத் தயாரிப்பை தமிழில் தொடங்கியுள்ளார். அவரை தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாது, தமிழ் சினிமா ரசிகர்களும் ஆவலுடன் வரவேற்றுள்ளார்கள்.
ஐ.டி.யில் வேலை பார்ப்பவர் ஹரிஷ் கல்யாண். மகனுக்கு சீக்கிரம் திருமணம் செய்துவிட வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர் அவரது அம்மா நதியா. ஆனால், இரண்டு வருடங்களாக இவானாவைக் காதலித்து வருகிறார் ஹரிஷ். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து அவர்களது பெற்றோர்களிடம் சொல்கிறார்கள். திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு தனது வருங்கால மாமியார் நதியாவுடன் பழகிப் பார்க்க வேண்டும், பிடித்தால் திருமணம், இல்லை பிரிவோம் என ‘ஐடியா’ கொடுத்து கட்டாயப்படுத்துகிறார் இவானா. அவரது ஆலோசனைப்படி இரண்டு குடும்பத்தினரும், நண்பர்களுடன் ‘டூர்’ செல்கிறார்கள். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி சுவாரசியமான, கலகலப்பான காதல் கதையை குடும்பத்துப் பின்னணியுடன் கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஹரிஷ், இவானா இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் உணர்வுபூர்வமாக அமைந்துள்ளன.
திருமணம் செய்து கொண்ட பின்தான் அம்மாவா, மனைவியா என பலருக்குப் பிரச்சினை வரும். ஆனால், இந்தப் படத்தில் திருமணத்திற்கு முன்பே அந்த சோதனையை அனுபவிக்கிறார் ஹரிஷ் கல்யாண். இரண்டு பக்கமும் மாட்டிக் கொண்டு அவர் தவிக்கும் தவிப்பை யதார்த்தமாய் வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஹரிஷ் கல்யாணை விடவும் படத்தில் நதியா, இவானா ஆகியோரைச் சுற்றி திரைக்கதை அதிகம் நகர்கிறது. இடைவேளைக்குப் பின் நதியா, இவானா இருவரும் ஒன்றாக ஊர் சுற்ற ஆரம்பித்ததும் அது இன்னும் அதிகமாகிறது. இருவருமே ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்துள்ளார்கள். அனுபவசாலியான நதியா முன்பு இவானாவும் தன் நடிப்புத் திறமையை போட்டி போட்டு வெளிப்படுத்தியுள்ளார்.
யோகிபாபு கொஞ்ச நேரம் வந்து கலகலப்பூட்டுகிறார். இருந்தாலும் ஹரிஷின் நண்பனாக வரும் ஆர்ஜே விஜய் அந்தக் குறையை தீர்த்து படம் முழுவதும் வந்து அடிக்கடி சிரிக்க வைக்கிறார்.
படத்தின் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணியே இசையமைத்துள்ளார். பாடல்களிலும், பின்னணி இசையிலும் படத்திற்குப் பொருத்தமாகத் தந்திருக்கிறார்.
இடைவேளைக்குப் பின் படம் கொஞ்சம் தடம் மாறுவது மட்டும் சறுக்கல். முதல் பாதியில் இருந்த சுவாரசியத்தை வைத்து வேறு விதமாக திரைக்கதை பயணித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.