எம்ஆர் மாதவன் இயக்கத்தில், போபோ சசி இசையமைப்பில், உதய் கார்த்திக், ரிஷி, மாறா, சாய் பிரியா தேவி, மானேக்ஷா, பாபு மற்றும் பலர் நடித்துள்ள படம்.

வட சென்னையின் மற்றுமொரு கேங்ஸ்டர் பழி வாங்கும் படம். சின்னச் சின்னக் குறைகள் இருந்தாலும் ரசிக்கும்படியான ஒரு படத்தைத்தான் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

மானேக்ஷா, பாபு இருவரும் வட சென்னையின் முக்கிய ரவுடிகள். பாபுவின் மைத்துனரைக் கொன்ற வழக்கில் மானேக்ஷ்வின் அடியாட்கள் எட்டு பேர் சரண்டர் ஆகிறார்கள். அவர்களில் ஒருவரான மாறாவுக்குப் பதில் அவரது நெருங்கிய நண்பரான ரிஷி சரண்டர் ஆகிறார். இந்த சரண்டருக்குப் பிறகு மானேக்ஷா, பாபு இருவரும் ஒன்றாக சேர்ந்து தொழில் செய்வதைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், சரண்டர் ஆனதில் ஆள் மாறாட்டம் நடந்துள்ளது என்பதைத் தெரிந்து கொண்ட பாபு, தன் மைத்துனரைக் கொன்ற மாறாவைக் கொலை செய்கிறார். சிறையில் இருக்கும் ரிஷியின் தம்பியான உதய் கார்த்திக் இதற்கு பழி வாங்கத் துடிக்கிறார். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள பலரும் வளரும் நடிகர்கள். ஆனால், ஒவ்வொருவருமே அவரவர் கதாபாத்திரங்களில் தங்களை பொருத்திக் கொண்டு அதற்கேற்றபடியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 

நெருங்கிய நண்பர்களாக மாறா, ரிஷி, ரிஷியின் தம்பி உதய் கார்த்திக், மாறாவின் மனைவியாக யாமினி சந்தர், உதய்கார்த்திக்கின் காதலியாக சாய் பிரியா தேவி, ரவுடிகளாக மானேக்ஷா, பாபு என ஒவ்வொருவருரையும் குறிப்பிட் வேண்டும். உதய் கார்த்திக் தான் படத்தின் கதாநாயகன். இடைவேளைக்குப் பின் அவருக்குத்தான் படத்தில் முக்கியத்துவம் அதிகம். 

ரவுடியிசமே வேண்டாமென்று ஒதுங்கியிருப்பவர் தனது அண்ணனின் நெருங்கிய நண்பனின் கொலைக்காக எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் இடைவேளைக்குப் பிறகான கதை. தனது கதாபாத்திரத்தில் மிகவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார் உதய். தொடர்ந்து நல்ல படங்களையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்தால் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடிக்கலாம்.

போபோ சசியின் பின்னணி இசை, ஜோன்ஸ் வி ஆனந்த்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாய் அமைந்துள்ளது.

ஒரே காட்சியிலேயே தேங்கி நிற்காமல் சில காட்சிகளின் நீளத்தைக் குறைத்து, அவற்றைச் சுருக்கி எடுத்திருந்தால் படம் இன்னும் வேகமாய் நகர்ந்திருக்கும். 

வளரும் நடிகர்களை வைத்து இப்படி ஒரு கவனம் ஈர்க்கும் படத்தைக் கொடுத்தற்காக இயக்குனருக்குப் பாராட்டுக்கள்.