மகேஷ்பாபு இயக்கத்தில், ரதன், கோபி சுந்தர் இசையமைப்பில், நவீன் பொலிஷெட்டி, அனுஷ்கா மற்றும் பலர் நடிப்பில் தெலுங்கில் உருவாகி தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்துள்ள படம்.

திருமணம் செய்து கொள்ளாமல் ஒருவரிடமிருந்து விந்து தானம் பெற்று குழந்தை பெற்றுக் கொள்ள நல்ல இளைஞரைத் தேடுகிறார் அனுஷ்கா. அவரது தேடலில் நவீன் பொலிஷட்டி கிடைக்கிறார். ஆனாலும், நவீன் அனுஷ்காவை மனதராக் காதலிப்பதாகக் கூறுகிறார். அந்தக் காதலை ஏற்காத அனுஷ்கா, தனது பிளாஷ்பேக் கதையைச் சொல்லி நவீனை விந்து தானம் செய்ய சம்மதிக்க வைக்கிறார். கரு உருவானதும், லண்டன் சென்று விடுகிறார். அனுஷ்கா மீதான காதலால் தவிக்கும் நவீன் அவரைத் தேடிச் செல்கிறார். அனுஷ்காவைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

அனுஷ்கா தான் தமிழ் ரசிகர்களுக்குத் தெரிந்த முகம். இருந்தாலும் தனது கலகலப்பான நடிப்பால் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துவிடுவார் நவீன். இறுக்கமான குணம் கொண்ட அனுஷ்கா, கலகலப்பான குணம் கொண்ட நவீன் என இருவருமே ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். 

கோபிசுந்தரின் பின்னணி இசை படத்திற்கு பலமாய் உள்ளது, பாடல்களில் ரதன் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். நீரவ் ஷா ஒளிப்பதிவு படத்தின் தரத்தை வெகுவாக உயர்த்தியுள்ளது.

கொஞ்சம் தடுமாறியிருந்தாலும் ‘விந்து தானம்’ என்பது ஆபாசமாகப் போயிருக்கும். ஆனால், படத்தில் அப்படி எந்தவிதமான விரசமும் இல்லாத அளவிற்க காதலும், காமெடியுமாக படத்தை நகர்த்தி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் மகேஷ் பாபு.