குரு ராமானுஜம் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், வெற்றி, தியா மயுரி, கேஜிஎப் ராம் மற்றும் பலர் நடித்துள்ள படம்.

வட சென்னையைச் சேர்ந்தவர் வெற்றி. போலீஸ் வேலைக்குப் போக வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர். அவரது மாமா மகன் விஷ்வந்த் திடீரென காணாமல் போகிறார். அவரைத் தேடி திருப்பதி வனப்பகுதிக்குச் செல்கிறார். ஆனால், செம்மரக் கடத்தலைத் தடுக்கும் விசாரணைப் பிரிவிடம் சிக்கிக் கொள்கிறார் வெற்றி. எப்படியோ அங்கிருந்து தப்பித்து விஷ்வந்த்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

‘புஷ்பா’ படத்தைப் படம் ஞாபகப்படுத்தினாலும் அந்தப் படம் போல கமர்ஷியலாக இல்லாமல் இந்தப் படத்தை உள்ளது உள்ளபடி கொடுத்திருக்கிறார்கள். ஒன்றரை மணி நேரப் படம்தான் என்றாலும் படம் விறுவிறுப்பாக நகர்கிறது.

விஷ்வந்த்தை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என தேடுதல் வேட்டையில் இறங்கும் இளைஞராக வெற்றி. படம் முழுவதும் ஒரு பரபரப்புடன் நடித்திருக்கிறார். செம்மரக் கடத்தல் கும்பலின் தலைவனாக கேஜிஎப் ராம். நேர்மையான போலீஸ் அதிகாரியாக கணேஷ் வெங்கட்ராமன். 

சாம் சிஎஸ் பின்னணி இசை, சுரேஷ் பாலா ஒளிப்பதிவு படத்தின் உணர்வுகளுக்கு உயிரளித்திருக்கிறது.

திருப்பதி மற்றும் அதன் சுற்று வட்டாரக் காடுகளில் படத்தை எடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் டாகமென்டரி வாசம் அடித்தாலும் செம்மரக் கடத்தல் பற்றிய பல விவரங்களை சொல்லியிருக்கிறது படம்.