நூடுல்ஸ் - விமர்சனம்
10 Sep 2023
மதன் தட்சிணாமூர்த்தி இயக்கத்தில், ஹரிஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார், மதன் தட்சிணாமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ள படம்.
காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஹரிஷ், ஷீலா. உடன் குடியிருப்பவர்களுடன் வார இறுதி நாள் இரவில் அனைவரும் ஒன்றாக உணவருந்திக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் மதன் உடன் வாக்குவாதம் ஏற்படுகிறது. கோபத்தில் கிளம்புகிறார் மதன். மறுநாள் காலையில் ஹரிஷ் வீட்டின் முன் இளைஞர் ஒருவர் திடீரென விழுந்து மரணமடைகிறார். தான் இழுத்துவிட்டதால்தான் அந்த இளைஞர் மரணமடைந்தார் என பயப்படுகிறார் ஷீலா. என்ன செய்வதென்று திகைத்துக் கொண்டிருக்கும் நிலையில் விசாரணைக்காக மீண்டும் வருகிறார் இன்ஸ்பெக்டர் மதன். அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு சிம்பிளான கதை, அதை எப்படி சுவாரசியமாகக் கொடுக்க வேண்டும் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார் இயக்குனர் மதன். ஒரு சாதாரண குடும்பத்தினர், போலீசால் எப்படி அவதிக்குள்ளாகின்றனர் என்பதை யதார்த்தமாய் பதிவு செய்திருக்கிறார்.
ஹரிஷ் உத்தமன், ஷீலா, இன்ஸ்பெக்டர் மதன், வக்கீல் வசந்த் ஆகியோர்தான் இந்தப் படத்தில் மிக யதார்த்தமாய் நடித்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
ஒரே ஒரு வீட்டிற்குள் படம் நகர்கிறதே என்று தோன்றினாலும் அது ஒரு குறையாகத் தெரியவில்லை. ஒவ்வொருவரது நடிப்பும் அந்தக் குறைகளை மறைத்துவிடுகிறது.
இம்மாதிரியான எளிய படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும். புதிய முயற்சிக்காக படக்குழுவினரை மனதாராப் பாராட்டலாம்.
Tags: noodles, madhan, harish uthaman, sheela