குட் டே - விமர்சனம்

25 Jun 2025

குடும்ப சூழல், வேலை பிரச்சனை காரணமாக குடிப் பழக்கத்துக்கு ஆளான ஒருவர் அதிலிருந்து விடுபட்டு திருந்துகிறாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

 

தமிழ் சினிமாவில் இதற்கு முன்பும் இப்படி ஒரு சில படங்கள் வந்தாலும் அவை மிகவும் சீரியான படங்களாகவே வந்துள்ளன. இந்தப் படத்தை ஒரு ‘நையாண்டி’ கலந்த நகைச்சுவைப் படமாகக் கொண்டு சென்று, கடைசியில் சென்டிமென்ட்டில் முடித்திருக்கிறார் இயக்குனர் அரவிந்தன்.

 

திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் சூபர்வைசர் ஆக வேலை பார்ப்பவர் பிரித்விராஜ் ராமலிங்கம். பணத் தேவைக்காக அழுத்தம் கொடுக்கும் குடும்பம், கம்பெனி வேலையில் மேனேஜர் தரும் சிக்கல், அதனால் ஏற்படும் அவமானம் அவரை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கியுள்ளது. ஒரு நாள் கம்பெனி முதலாளி அடித்துவிட, ரூமிற்குச் சென்றால் அங்கு வீட்டு உரிமையாளரிடம் சண்டை போட்டு சாலைகளில் நடக்க ஆரம்பிக்கிறார். போலீசிடம் சிக்கி ஸ்டேஷனில் இருக்கும் போது அங்கிருந்தும் ஓடிவிடுகிறார். வழியில் மேலும் சில பிரச்சனைகளை போதையில் ஏற்படுத்துகிறார். அவரைப் போலீசார் தேடுகிறார்கள். கடைசியில் போலீசிடம் சிக்கினாரா, போதையில் சென்றவர் பாதை மாறினாரா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

 

பிரித்விராஜ் ராமலிங்கம், அந்த குடிகாரன் கதாபாத்திரத்தில் அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறார். குடித்தவர்களுக்கு சமயங்களில் எதைப் பார்த்தாலும் ஒரு பயம் இருக்காது. போதையில் என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் செய்வார்கள். ஸ்டேஷனிலிருந்து ஓடுபவர் அடுத்தடுத்து சந்திக்கும் நபர்கள், செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் ஒரு ‘நையாண்டி’ இருந்து கொண்டே இருக்கிறது. 

 

மற்ற கதாபாத்திரங்கள் திரைக்கதையில் வந்து போகின்றன. ஒவ்வொருவருக்கும் சில நிமிடங்கள் சில காட்சிகள் என இருந்தாலும் அவர்களில் சிலர் தங்களது அழுத்தமான நடிப்பைப் பதிவு செய்கிறார்கள். பிரித்விராஜின் முன்னாள் காதலியாக மைனா நந்தினி, அவரது கணவராக ஆடுகளம் முருகதாஸ், ஒரே ஒரு காட்சியில் நண்பராக பக்ஸ், போக்குவரத்து ஊழியராக போஸ் வெங்கட், ஆட்டோ டிரைவராக காளி வெங்கட், இன்ஸ்பெக்டராக விஜய் முருகன், சப் இன்ஸ்பெக்டராக ஜீவா சுப்பிரமணியம், சுடுகாடு ஊழியராக வேல ராமமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

 

திருப்பூர் மாநகரத்தில் ஓர் இரவில் நடக்கும் கதை. நாயகன் தெருத் தெருவாக ஓடிக் கொண்டே இருக்க, அவர் கூடவே பயணித்து சிரமப்பட்டு படமாக்கியிருப்பார் ஒளிப்பதிவாளர் மதன் குணதேவ் என்பது காட்சிகளைப் பார்க்கும் போதே புரிய வரும். அவரே படத்தொகுப்பாளராகவும் கச்சிதமாகத் தொகுத்துள்ளார். கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தைத் தந்துள்ளது.

 

லாஜிக் மீறலான சில காட்சிகள் இடைவேளைக்குப் பிறகு கேள்விகளை எழுப்புகிறது. அவற்றையும் அந்த மீறல் இல்லாமல் காட்சிப்படுத்தி இருக்க வேண்டும். இருந்தாலும் குடி குடியைக் கெடுக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து எடுத்த ஒரு படமாக உள்ளது.

Tags: good day

Share via: