திருக்குறள் – விமர்சனம்
25 Jun 2025
உலகப் பொதுமறை நூல் என்றழைக்கப்படும் ‘திருக்குறள்’ நூலை எழுதிய ஐயன் திருவள்ளுவர் பற்றிய படத்தை புனைவுக் கதைகளுடன் எழுதியிருந்தாலும் இப்படியும் இருந்திருக்குமோ என்ற விதத்தில் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலகிருஷ்ணன்.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றுப் படம் என்று சொல்ல முடியாது. மனைவி வாசுகியுடன் திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் அவர் ‘முப்பால்’ நூலான திருக்குறளை எழுதிய காலகட்டக் கதையை கற்பனையாகக் கொடுத்திருக்கிறார்.
தன் மாணவன் ஒருவனின் கலப்புக் காதல், வீரன் ஒருவனின் காதல், தம்பியின் ஆசைக்காக ஆட்சியை விட்டுத் தரும் அண்ணன், திருக்குறளை ஏற்க மறுக்கும் மதுரை தமிழ்ச் சங்கம், தனது எழுத்துப் பணிக்காக உதவி செய்யும் வியாபார நண்பன் என திரைக்கதையில் சில கதாபாத்திரங்களின் ஊடாக திருவள்ளுவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைக் கதையாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
வள்ளுவர் கதாபாத்திரத்தில் கலைச்சோழன் நடித்திருக்கிறார். அவருடைய அமைதியான, அடக்கமான, அன்பான நடிப்பு வள்ளுவர் இப்படித்தான் இருந்திருப்பாரோ என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பேச்சும், உடல்மொழியும் அவருடைய நடிப்பில் குறிப்பிட வேண்டியவை.
வள்ளுவர் மனைவி வாசுகியாக தனலட்சுமி. மேக்கப்பை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். ஆனால், நடிப்பில் குறையில்லாமல் நடித்திருக்கிறார். கணவர் மனம் அறிந்து அவருக்கு உதவியாக இருக்கும் மனைவி கதாபாத்திரம். ஒரு ஆணுக்குப் பின்னால் பெண் இருப்பார் என்பதை உறுதிப்படுத்துவது போல உள்ளது. அவர்களுக்கு இடையிலான காதல், நேசம் ஆகியவற்றை அழகாகக் காட்டியிருக்கிறார்கள்.
மற்ற கதாபாத்திரங்களில் புலவர் பெருந்தலைச்சாத்தனராக கொட்டாச்சி, பாண்டிய மன்னனாக ஓஎகே சுந்தர், நக்கீரராக சுப்பிரமணிய சிவா, வீரன் பரிதி கதாபாத்திரத்தில் குணாபாபு, அவரது காதலி பவளக்கொடியாக பாடினி குமார், மன்னர் குமணன் ஆக அரவிந்த் ஆண்டவர் நடித்திருக்கிறார்கள்.
இளையராஜாவின் இசையில் பின்னணி இசையில் படம் முழுவதும் மென்மையான அனுபவம் இழைந்தோடுகிறது. எட்வின் ஒளிப்பதிவு கிடைத்த வசதியில் ஒரு சுகமான காட்சிப் பதிவைத் தந்திருக்கிறது.
படத்தின் உருவாக்கத்தில் பட்ஜெட் ஒரு பிரச்சனையாக இருந்திருக்கும் என்பது பல இடங்களில் தெரிகிறது. இதுவரை யாரும் எடுக்காத ஒரு முயற்சியை எடுத்த இயக்குனர் பாலகிருஷ்ணனுக்குத் தனிப்பாராட்டுக்கள். இன்னும் பிரம்மாண்டமாய் எடுத்திருக்கலாம் என்பது மட்டுமே படம் முடிந்த பின் மனதில் ஓடியது.
Tags: thirukkural, balakrishnan