டிஎன்எ - விமர்சனம்

21 Jun 2025

அதர்வா மற்றும் நிமிஷா சஜயன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள "டிஎன்எ" திரைப்படம், குழந்தை கடத்தல் குற்றம் ஒன்றை மையமாகக் கொண்ட சுவாரஸ்யமான நவீனத் திரில்லராக உருவாகியுள்ளது. 

அதர்வா, நிமிஷா தம்பதியிருக்குப் பிறந்த ஆண் குழந்தை, பிறந்த சில மணி நேரங்களில் மர்மமான முறையில் கடத்தப்பட்டு, வேறு குழந்தை மாற்றி வைக்கப்படுகிறது. நிமிஷா தனது தாயுணர்வின் அடிப்படையில், இது தனது குழந்தை இல்லை என்று கூறுகிறார். ஆனால் மருத்துவமனையின் அனைத்து ஆவணங்களும், சிசிடிவி காட்சிகளும் அந்தக் குழந்தைதான் அவரது குழந்தை என உறுதி செய்கின்றன. இருந்தாலும் தனது மனைவி நிமிஷாவின் நம்பிக்கையை மையமாக வைத்து, உண்மையை கண்டறிய அதர்வா தனது போராட்டத்தை ஆரம்பிக்கிறார். காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கிறார். வழக்கை விசாரிக்கும் போலீஸ் பாலாஜி சக்திவேலும் உதவி புரிய, அந்த முயற்சி, அவரை ஒரு பரபரப்பான விசாரணைக்கும், சமூகத்தில் பதுக்கிக்கொண்டிருக்கும் குழந்தை கடத்தல் வலையமைப்பிற்கும் வழி நடத்துகிறது. பின், காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அதர்வா, ஒரு காதல் தோல்வியில் விழுந்து போதை பழக்கத்தால் பாதிக்கப்படும் இளைஞராக கதையில் அறிமுகமாகி, பின்னர் தனது மனைவியின் மீது கொண்ட காதலால் ஒரு பொறுப்பான கணவராக மாறுகிறார். இந்த மாற்றத்தைக் அவர் நன்கு நிகழ்த்தியிருக்கிறார். பெரும்பாலான இடங்களில் அவருடைய நடிப்பு அதை மேலும் மெய்ப்பிக்கிறது.

நிமிஷா சஜயனின் நடிப்பு திரைப்படத்தின் உணர்வுப் பிணைப்புக்கு முதன்மை உரிமை அளிக்கிறது. வார்த்தைகளைக் காட்டிலும் பார்வையின் மூலம் தனது மனவலியை வெளிப்படுத்தி, குழந்தையை இழந்த தாயின் வலியை மிகவும் சிறப்பாகக் காட்டியிருக்கிறார். அவரது வேதனைகள், ஒரே பார்வையிலேயே புரிந்து கொள்ளும் அளவுக்கு தீவிரமாக இருக்கின்றன.

போலீசாரின் பங்கு முக்கியமானதாகும். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்த பாலாஜி சக்திவேல் தனது இயல்பான நடிப்புடன் கதையின் நெருக்கத்தை அதிகரிக்கிறார். அதர்வாவின் தந்தையாக சேத்தன், நிமிஷாவின் தாயாக விஜி சந்திரசேகர், அதர்வா நண்பனாக ரமேஷ் திலக், இன்ஸ்பெக்டராக செல்வராஜ் மற்றும் குழந்தைக் கடத்தலின் முக்கிய புள்ளியான சுப்பிரமணிய சிவா ஆகியோர் தங்களின் சிறிய வேடங்களிலும் கவனம் பெறுகிறார்கள். குழந்தையைக் கடத்தும் அந்த பாட்டி நடிப்பு மிரள வைக்கிறது.

பாடல்கள் சில நேரங்களில் தடுமாறினாலும், ஜிப்ரானின் பின்னணி இசை மற்ற காட்சிகளில் அழுத்தமான இசையைப் பதிவு செய்துள்ளது.  பார்த்திபனின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பாளர் சாபு ஜோப், படத்திற்கான சரியான பக்கபலம்.

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், ஒரு பொதுவான கதையை ஒரு தனித்த கோணத்தில் பார்ப்பதற்கான முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார். குழந்தை கடத்தலை விசாரணை மற்றும் சமூக பின்னணியுடன் இணைத்து வித்தியாசமாகச் சொல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் இரண்டாம் பாதியில் பழைய பாணியிலான சில சென்டிமென்ட் காட்சிகள் வழக்கமான சினிமா என்ற உணர்வை ஏற்படுத்தி விடுகின்றன.

‘டிஎன்எ’ ஒரு நெகிழ்ச்சியான, சுவாரஸ்யமான, அழுத்தமான கதையை சொல்லும் திரைப்படமாக இருக்கிறது. உணர்வுபூர்வமான கதையை க்ரைம் பின்னணியில் கொடுத்து ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைத்துள்ளார்கள்.

Tags: dna, atharva, nimisha sajayan, nelson venkatesan

Share via: