குபேரா – விமர்சனம்

20 Jun 2025

தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதைகள் இன்னும் அதிகம் இருக்கிறது என்பதை இந்தப் படம் மீண்டும் நிரூபித்திருக்கிறது. தெலுங்குத் திரையுலகத்தில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான சேகர் கம்முலா, ஒரு மாறுபட்ட கதை, மிகவும் புதிதாகக் கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார். படத்தின் உருவாக்கம், நடிகர்களிடம் அவர் வாங்கிய நடிப்பு இந்தப் படத்தைப் பற்றி அதிகம் பேச வைக்கும்.

மும்பை அருகே பசிபிக் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட மீத்தேன் வாயுவை தங்களது நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிவெடுக்கிறார் பிரபல கார்ப்பரேட் நிறுவன அதிபரான ஜிம் சர்ப். அதற்காக மந்திரிகள், அரசியல்வாதிகள், அதிகாரத்தில் உள்ளவர்களுக்காக ஒரு லட்சம் கோடியைக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை. அதை எந்த சிக்கலும் இல்லாமல் தருவதற்காக சிறையில் உள்ள நேர்மையான சிபிஐ அதிகாரியான நாகார்ஜுனாவை வெளியில் கொண்டு வருகிறார். நாகார்ஜுனா ஆலோசனைப்படி நான்கு பிச்சைக்காரர்களைத் தேர்வு செய்து அவர்கள் பெயரில் கம்பெனி ஆரம்பித்து அதற்கான பணப் பரிமாற்ற வேலைகள் நடக்க ஆரம்பிக்கிறது. அந்த நான்கு பிச்சைக்காரர்களில் தனுஷும் ஒருவர். பணப்பரிமாற்றம் நடந்த பின் அவர்களைக் கொலை செய்வதுதான் ஜிம் சர்ப் திட்டம். மூவர் கொல்லப்பட்டுவிட தனுஷ் மட்டும் தப்பிக்கிறார். அவரைத் தேடிப் பிடித்தார்களா, அடுத்து என்ன நடந்தது என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதிக் கதை.

இந்தப் படத்தின் பெரும் பலம் நட்சத்திரத் தேர்வும், அதில் அவர்களின் நடிப்பும். பிச்சைக்காரன் தனுஷ், காதலனால் ஏமாற்றப்பட்டு மும்பையில் வேலை தேடும் ரஷ்மிகா மந்தனா, முன்னாள் சிபிஐ அதிகாரி நாகார்ஜுனா, கார்ப்பரேட் அதிபர் ஜிம் சர்ப், ஆகிய நால்வரின் தேர்வும் நடிப்பும் இந்தப் படத்தை எங்கேயே கொண்டு சென்றுவிடுகிறது. அதிலும் தனுஷின் நடிப்பு அபாரம். வேறு எந்த ஒரு கதாநாயகனும் இப்படி ஒரு பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். அவரது அறிமுகக் காட்சி, ஆரம்பக் காட்சிகளில் அவரது தோற்றம், நடிப்பு, உடல் மொழி அனைத்துமே அசத்தல். பிறகு கோட், சூட் மாட்டிக் கொண்டு கோடி, கோடி, கோடிக்கு அதிபதி ஆனாலும், அந்த பிச்சைக்காரன் உடல் மொழியும், பேச்சும் அவ்வப்போது கூடவே வருவதெல்லாம் நடிப்பின் மற்றொரு சிறப்பம்சம்.

காதலித்தவனை நம்பி மும்பைக்கு வந்து அவன் வராமல் ஏமாற்றமடைந்து தவித்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரத்தில் ரஷ்மிகா மந்தனா. அவருக்கான வேறு எந்த ஒரு பின்னணியையும் காட்டாமல் அவருடைய கதாபாத்திரத்தை அழுத்தமாகப் பதிய வைத்திருக்கிறார் இயக்குனர். பாவம் பார்த்து தனுஷுக்கு சிறு உதவி செய்யப் போய் தனுஷ் கூடவே சேர்ந்து அவரும் ஓடிக் கொண்டே இருக்கிறார். தனக்கு எந்த கதாபாத்திரம் வேண்டுமானாலும் கொடுங்கள், நடிப்பில் அசத்தத் தெரியும் என சவால் விடுகிறார் ரஷ்மிகா.

நாகார்ஜுனா, எப்போதோ ஒரு முறை மட்டுமே தமிழ் சினிமா பக்கம் வந்து போவார். இந்தப் படத்தில் பரிதாபத்துக்குரிய ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நேர்மையான அதிகாரியாக இருந்தாலும் இந்த நாட்டில் அவர்களுக்கு நீதி, நியாயம் கிடைக்காது என்பதை அவரது கதாபாத்திரம் உணர்த்துகிறது. ஒரு பக்கம் குடும்ப சூழல், மற்றொரு பக்கம் அப்பாவி பிச்சைக்காரர்களை சிக்கலில் சிக்க வைத்து குற்ற உணர்வு என நடிப்பில் அவரது அனுபவம் பேசுகிறது.

செய்திகளில் அடிக்கடி அடிபடும் கார்ப்பரேட் அதிபர்கள் இப்படித்தான் இருப்பார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறார் ஜிம் சர்ப். யாரைப் பற்றியும், எந்த உயிர் பற்றியும் கவலையில்லை தன்னுடைய கம்பெனி, தனக்கான வருமானம் மட்டுமே முக்கியம் என்பதை காட்சிக்குக் காட்சி உணர்த்துகிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பின்னணி இசை பல உணர்வுபூர்வமான காட்சிகளை இன்னும் மேம்படுத்துகிறது. மூன்று மணி நேரப் படத்தில் சரியான ஒரு சந்தர்ப்பத்தில் வரும் ‘போய் வா நண்பா’ பாடல் என்னவோ செய்கிறது. நிகேத் பொம்மி ரெட்டியின் ஒளிப்பதிவு படத்தை மிகப் பிரம்மாண்டமாகக் காட்டியுள்ளது. கார்த்திகா ஸ்ரீனிவாஸ் படத் தொகுப்பு காட்சிகளை நேர்த்தியாகத் தொகுத்துள்ளது, சில காட்சிகளின் நீளத்தை மட்டும் குறைத்திருக்கலாம்.

கிளைமாக்ஸ் முன்பாகவும் கிளைமாக்ஸும் திடீரென ஒரு ஆக்ஷன் படமாக மாறிவிட்டது. ஆரம்பம் முதல் வேறு ஒரு தளத்தில் பயணித்த படம், திடீரென ஆக்ஷன், துப்பாக்கி சண்டை என சட்டென முடிந்த உணர்வு.

இருந்தாலும் தமிழ் சினிமாவில் தங்களை பிரம்மாண்ட இயக்குனர்கள் என சொல்லிக் கொண்டு அரைத்த மாவையே அரைத்துக் கொடுத்த படங்களைப் பார்த்த நமக்கு ஒரு தெலுங்கு இயக்குனர், தமிழ் நாயகனை வைத்து இப்படி ஒரு படத்தைக் கொடுத்ததற்கு பாராட்டுக்களோடு படத்தைப் பார்க்கலாம்.

Tags: kuberaa, dhanush, nagarjuna, rashmika mandana, sekhar kammula, devi sri prasad

Share via: