சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் – விமர்சனம்
20 Jun 2025
ஒரு வங்கியிலிருந்து கொள்ளையடிக்க கூட்டுத் திட்டம் தீட்டுகிறார்கள் சிலர். அவர்கள் திட்டமிட்டபடி அந்த வங்கியைக் கொள்ளை அடித்தார்களா, அல்லது சிக்கிக் கொண்டார்களா என்பதுதான் இந்த ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’. சீரியஸ் கொள்ளைப் படமாகக் கொண்டு செல்லாமல் காமெடிப் படமாகக் கொண்டு செல்ல முயற்சித்துள்ளார்கள்.
வைபவ், மணிகண்டன் ராஜேஷ் சிறு வயது முதலே நண்பர்கள், திருட்டுத்தனங்கள் செய்பவர்கள். அவர்களுக்கு ‘காட் பாதர்’ ஆக இருப்பவர் லிவிங்ஸ்டன். இவரது முன்னாள் முதலாளியான ஷிஹான் ஹுசைனி, இன்ஷுரன்ஸ் பணம் பெறுவதற்காக தனது வீட்டில் கொள்ளையடிக்க வைத்து பணத்தைப் பிறகு திருப்பித் தருமாறு லிவிங்ஸ்டனிடம் கேட்கிறார். அதன்படி வைபவ், மணிகண்டன் இருவரும் ஷிஹான் வீட்டில் கொள்ளை அடிக்கிறார்கள். ஆனால், அங்கிருந்து எடுத்த பணம், நகைகளை தொலைத்துவிடுகிறார்கள். அந்தப் பணத்தைத் திருப்பித் தர, ஆனந்தராஜ் தலைமையிலான ஒரு கூட்டத்துடன் சேர்ந்து வங்கிக் கொள்ளையை நடத்த கூட்டணி சேர்கிறார்கள். இவர்களது கூட்டுக் கொள்ளை திட்டம் நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
‘நியாயத் தராசு, இதயத் தாமரை, அமரன், கோவில்பட்டி வீரலட்சுமி’ படங்களை இயக்கிய கே ராஜேஷ்வர் மகன் விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்கள். முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் காமெடி, விறுவிறுப்பு சேர்த்து படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
மினிமம் பட்ஜெட் படங்களுக்கான பொருத்தமான ஒரு நடிகர் வைபவ். காதல் படமோ, நகைச்சுவைப் படமோ, த்ரில்லர் படமோ எந்த ஒரு படத்திற்கும் சரியாகப் பொருந்தும் ஒரு நடிகர். இந்தப் படத்தின் நாயகன் கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான தேர்வாக இருக்கிறார். கொடுத்த கதாபாத்திரத்தை சரியாகச் செய்திருக்கிறார். அவரது காதலியாக அதுல்யா ரவி, காதலை சொல்லாமல் வைத்திருந்தாலும் வைபவ்வுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வைபவ்வின் உற்ற நண்பனாக மணிகண்டன் ராஜேஷ்.
ஆனந்தராஜ் தலைமையிலான கூட்டத்தில் சுனில் ரெட்டி, மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய் ஆகியோர் இருக்கிறார்கள். அனைவருக்கும் சமமான பங்கில் வசனங்கள் இருந்தாலும் வழக்கம் போல ஆனந்தராஜ் மற்றவர்களை ஓவர் டேக் செய்கிறார். ரெடின் கிங்ஸ்லியும் இந்தக் கூட்டத்தில் வந்து இணைகிறார். லிவிங்ஸ்டன், ஷிஹான் ஹுசைனி இருவரும் அவ்வப்போது வந்து போகிறார்கள்.
இமான் இசையில் படத்தின் முதல் பாடல் ரசிக்க வைக்கிறது. காமெடி படத்திற்குரிய பின்னணி இசையை கொடுத்திருக்கிறார். டிஜோ டோமி ஒளிப்பதிவு படத்தில் குறிப்பிட வேண்டிய ஒன்றாக உள்ளது.
வங்கிக் கொள்ளை பற்றிய படங்கள் தற்போதைய பேஷன். இந்தப் படத்தில் பெரும் காமெடி நட்சத்திரக் கூட்டத்துடன் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இன்னும் அதிகமான காமெடியைச் சேர்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இருந்தாலும் இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில் அதிக விறுவிறுப்பைச் சேர்த்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
Tags: chennai city gangsters, vaibhav, athulya