அயலி - விமர்சனம்
26 Jan 2023
முத்துக்குமார் இயக்கத்தில், ரேவா இசையமைப்பில், அபிநயஸ்ரீ, அனுமோள், அருவி மதன், சிங்கம்புலி மற்றும் பலர் நடிப்பில் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள வெப் தொடர் ‘அயலி’.
1990களில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் கதையாக இத்தொடரின் கதை எழுதப்பட்டுள்ளது. அங்கு உள்ள ‘அயலி’ தெய்வத்தை கிராம மக்கள் வணங்குகிறார்கள். அந்த கிராமத்தைப் பொறுத்தவரையில் ஒரு பெண் பருவடைந்த பின், அவள் படித்துக் கொண்டிருந்தால் படிப்பை நிறுத்திவிட்டு உடனே திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். இல்லை என்றால் அது தெய்வ குற்றமாகிவிடும் என்று ஒரு நம்பிக்கை. இதனால் அங்கு பெண்கள் 9ம் வகுப்புக்கு மேல் படிக்க மாட்டார்கள். இந்நிலையில் 8ம் வகுப்பு படிக்கும் அபிநயஸ்ரீ நன்றாகப் படித்து டாக்டராக வேண்டும் என்று நினைக்கிறார். அவள் அப்படியெல்லாம் படிக்க முடியாது என தோழிகள் கூறுகிறார்கள். அபியும் பருவமடைகிறாள். ஆனால், அவளும், அவளது தாயும் அதை கிராம மக்களிடம் மறைக்கிறார்கள். 10ம் வகுப்பைத் தொடும் அபியை மேலும் படிக்கக் கூடாது என கிராம மக்கள் எதிர்க்கிறார்கள். தங்கள் மகள் பருவடையவில்லை என அவரது பெற்றோர் சண்டை போடுகிறார்கள். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.
இந்தக் காலத்திலும் சில இடங்களில் இன்னமும் இப்படியான சில கட்டுப்பாடுகள் இருக்கிறது என்பதைக் கேட்கும் போது ஆச்சரியமாக உள்ளது. பெண்கள் முன்னேற்றத்திற்காக காலம் காலமாக பலரும் இங்கு போராடி வருகிறார்கள். வட இந்தியாவை ஒப்பிடும் போது நாம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறோம். அதிகமான பெண்கள் வேலைக்குச் செல்லும் மாநிலமாக நமது தமிழ்நாடு திகழ்கிறது. படிப்புக்கும், பெண்கள் முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து துணிச்சலான ஒரு தொடரைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் முத்துக்குமார். கதைக்கான களம், கதாபாத்திர வடிவமைப்பு, அதற்கான பொருத்தமான நட்சத்திரத் தேர்வு, வசனம், பின்னணி இசை என அனைத்துமே பாராட்டுமபடி அமைந்துள்ளது.
தமிழ்ச்செல்வி கதாபாத்திரத்தில் நடித்துள்ள அபிநயஸ்ரீ அந்தக் கதாபாத்திரத்திற்கு அப்படி ஒரு உயிரைக் கொடுத்திருக்கிறார். தனது லட்சியம் வெற்றி பெற வேண்டும் என எந்த விதமான தடைகளையும் எதிர்கொள்ளும் தைரியமான கதாபாத்திரம். ஒரு சிறுமியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து, அதில் பொருத்தமான ஒருவரை நடிக்க வைத்து பாராட்டுக்களை அள்ளுகிறார்கள்.
தமிழ்ச்செல்வியின் அம்மாவாக அனுமோள், அப்பாவாக ‘அருவி’ படத்தில் நடித்த மதன், ஆச்சரியப்படும்படி நடித்திருக்கிறார்கள். வில்லன்களாக லிங்கா, சிங்கம்புரி, டிஎஸ்ஆர் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ரேவாவின் பின்னணி இசையும், ராம்ஜியின் ஒளிப்பதிவும் தொடருக்கு நல்லதொரு பக்கபலமாக அமைந்துள்ளது.
த்ரில்லர் வெப் தொடர்கள்தான் தமிழில் அதிகம் வந்து கொண்டிருக்கிறது. அவற்றிலிருந்து நல்ல மாற்றத்தைக் கொடுத்திருக்கிறது இந்த ‘அயலி’.
Tags: ayali, muthukumar, abinayasri, anumol, aruvi madan, reva