துணிவு – விமர்சனம்

12 Jan 2023

வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், அஜித்குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

‘நேர்கொண்ட பார்வை, வலிமை’ படங்களுக்குப் பிறகு வினோத் – அஜித் கூட்டணி இணைந்த இந்தப் படம் முந்தைய படங்களைக் காட்டிலும் அஜித் ரசிகர்களை நிறையவே திருப்திப்படுத்தியிருக்கிறது.

சர்வதேச அளவில் கேங்ஸ்டர் ஆக இருப்பவர் அஜித். அவருடைய டீமில் இருப்பவர் மஞ்சு வாரியர். ஒரு வங்கிக் கொள்ளை நடக்கும் போது அங்கு கொள்ளை அடிக்க வந்தவர்களை திகைக்க வைக்கிறார் அஜித். தானும் கொள்ளை அடிக்கத்தான் வந்தேன் என அந்த கொள்ளையர்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார். அவர் வங்கி உள்ளே இருக்க, வெளியில் இருந்து கொண்டு நடப்பதை அஜித்திற்க அப்டேட் தருகிறார் மஞ்சு வாரியர். இருவரும் சேர்ந்து அந்த வங்கிக் கொள்ளையை நடத்த யார் திட்டமிட்டது என்பதை பொதுமக்களுக்கத் தெரிவிக்கிறார்கள். மேலும், தான் ஏன் அந்த வங்கியைக் கொள்ளை அடிக்க வந்தேன் என அஜித்தும் ஒரு விளக்கம் தருகிறார். அது என்ன, ஏன் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்கும் போது அஜித் வேறு ஒரு உற்சாகத்தில் நடிக்கிறார். இதற்கு முன்பு வந்த ‘மங்காத்தா’, இப்போது இந்த ‘துணிவு’. சர்வதேச கேங்ஸ்டர் ஆக அஜித். படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கென்று எந்தப் பெயரும் இல்லை. ஆனால், மைக்கேல் ஜாக்சன் என ஒரு ‘நிக்’ வைத்துதான் படம் முழுவதும் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆக்ஷன், ஸ்டைல் என அதிரடி காட்டியிருக்கிறார் அஜித். வங்கியைக் கொள்ளை அடிக்க வந்த அஜித், வங்கிகள் பொதுமக்களிடம் அடிக்கும் கொள்ளையைப் பற்றிப் பேசும் போது தியேட்டரில் கைத்ட்டல் அள்ளுகிறது.

ஒரு ஆக்ஷன் படத்தில் ஹீரோவுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ‘அசுரன்’ படத்தில் நடித்த மஞ்சு வாரியர் தானா இது என ஆச்சரியப்பட வைக்கிறார். ஆக்ஷனிலும் அசத்துகிறார் மஞ்சு.

போலீஸ் கமிஷனராக சமுத்திரக்கனி. அவரை வேலை செய்ய விடாமல் தடுக்க கமோண்டோ அதிகாரி வந்து பேசும் போது ‘ரவீந்தர் இது எங்க ஊரு’ என வசனம் பேசும் போது தியேட்டரே ஆர்ப்பரிக்கிறது. வில்லனாக ஜான் கொக்கேன், அஜித்தின் அதிரடிக்கு அடிபணிந்து கைகட்டி அமர்கிறார்.

ஜிப்ரான் பின்னணி இசை, சுப்ரீம் சுந்தர் சண்டைப் பயிற்சி படத்தில் அமர்க்களமாக அமைந்துள்ளது. 

படத்தின் முதல் பாதியில் எந்தவிதமான லாஜிக்கையும் பார்க்க முடியவில்லை. யார் யாரோ சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எவ்வளவு தோட்டாக்களைச் சுட்டார்கள் என்று கணக்கெடுக்க முடியாத அளவுக்கு சுட்டுத் தள்ளுகிறார்கள். இரண்டாம் பாதி கொஞ்சம் தொய்வைத் தந்தாலும் வங்கிகள் நம்மிடம் நடத்தும் கொள்ளை பற்றி விளக்குவது இந்தக் காலத்திற்குத் தேவையான ஒன்று.
 

Tags: thunivu, vinoth, ajithkumar, manju warrier, ghibran

Share via: