ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா, கதநந்தி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒரு காலத்தில் வயது முதிர்ந்து படுத்த படுக்கையாக இருக்கும் முதியவர்களை ‘தலைக்கூத்தல்’ என்று சொல்லி அவர்களை உயிரிழக்க வைப்பார்கள். முதியவர்களை இப்படி கொலை செய்வதை ஒரு வழக்கமாகவே செய்து வந்தார்கள். அதைக் கருவாகக் கொண்டு உருவான படம்தான் இது.

சமுத்திரக்கனி கிராமத்தில் இருக்கும் ஏழை கட்டிட மேஸ்திரி. வயது முதிர்ந்த அப்பா ஒரு விபத்தில் படுத்த படுக்கை ஆனதால், கட்டிட வேலையை விட்டுவிட்டு எடிஎம் ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கிறார். அப்பா எப்படியும் எழுந்து நடப்பார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சமுத்திரக்கனி. ஆனால், உறவினர்கள் அவருக்கு ‘தலைக்கூத்தல்’ செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள். அதனால், அவருக்கும் மனைவி சமுததிரக்கனிக்கும் சண்டை நடந்து பிரிவு வரை செல்கிறது. அதன்பின் சமுத்திரக்கனி என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அப்பா மீது அதிக பாசமும், நம்பிக்கையும் வைத்திருக்கும் பாசமான மகனாக சமுத்திரக்கனி. இந்தக் காலத்தில் இப்படியும் பாசமாக இருக்கும் மகன்களைப் பார்ப்பது அரிதுதான். தான் பெற்ற மகளை விட அப்பாவே வேண்டும் என மனைவியிடம் சொல்வதை வைத்தே சமுத்திரக்கனி எப்படிப்பட்ட மகன் என்பதைப் புரிந்து கொள்ளலாம். சமுத்திரக்கனியின் மனைவியாக ஒரு கிராமத்துப் பெண்ணை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் வசுந்தரா. 

சமுத்திரக்கனியின் அப்பாவின் இளமைக் கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருக்கிறார். படத்தின் நடுவே கதிர் மற்றும் அவர் காதலிக்கும் கதநந்தி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் அடிக்கடி வந்து போகிறது. அதில் சாதிய வேறுபாட்டைப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

சமுத்திரக்கனியின் வீட்டைச் சுற்றியே பெரும்பாலான கதை நகர்கிறது. கதாபாத்திரங்களும், அதற்கான தேர்வும் சிறப்பாக அமைந்துள்ளது. மெதுவாக நகரும் திரைக்கதைதான் படத்திற்கான மைனஸ். விருதுகளை குறி வைத்து எடுக்கப்பட்டுள்ள படமாகவே தெரிகிறது.