தமிழில் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஹேஷாம் அப்துல் வஹாப்

31 Jan 2025

 

தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பான் இந்திய இசையமைப்பாளரான ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் உருவாகி, 'ஒன்ஸ்மோர்' எனும் படத்தில் இடம்பெற்ற ''வா கண்ணம்மா..' எனும் பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருவதுடன் ஆயிரக் கணக்கிலான ' ரீல்ஸ் 'களிலும் இடம் பிடித்து புதிய மைல்கல் பயணத்தை தொடங்கி இருக்கிறது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஒன்ஸ்மோர் ' எனும் திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் , அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ்கமல் கவனித்திருக்கிறார். இளமை துள்ளலுடன் கூடிய பொழுதுபோக்கு படைப்பாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரித்திருக்கிறார்.

'ஹிருதயம்', 'குஷி', 'ஹாய் நன்னா '' ஆகிய பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற படங்களுக்கு இசையமைத்து முன்னணி நட்சத்திர இசையமைப்பாளராக உயர்ந்திருக்கும் ஹேஷாம் அப்துல் வஹாப் ' ஒன்ஸ்மோர் ' படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவரின் இசையில் ' ஒன்ஸ்மோர் ' படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி, இசை ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து திருமண வைபவத்தை கொண்டாடும் வகையில் ' வா கண்ணம்மா..' என்ற பாடலை படக் குழுவினர் பொங்கல் விடுமுறை தினத்தன்று வெளியிட்டனர். இந்த பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுத , இசையமைப்பாளரும் பின்னணி பாடகருமான ஹேஷாம் அப்துல் வஹாப் மற்றும் பின்னணி பாடகி உத்ரா உன்னிகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் - பண்பாடு - இசை- திருக்குறளுடன் தொடங்கும் பாடல் வரிகள்- இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப்பின் திரை தோன்றல்- என பல சுவாரசியமான அம்சங்கள் இடம் பிடித்திருப்பதால் இந்தப் பாடல் இதுவரை ஐந்தரை மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. அத்துடன் இந்த பாடலை இளைய தலைமுறையினரின் சமூக வலைதள நடவடிக்கையை ஊக்குவிக்கும் வகையில் படக்குழுவினர் இந்தப் பாட்டுக்கு நடனமாடி ரீல்ஸாகவும் வெளியிட்டனர். இதனால் உற்சாகமடைந்த 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைய தலைமுறையினர் இந்த பாடலுக்கு நடனம் ஆடி அதனை அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றினர். இதுவும் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

இந்த பாடலுக்கான மெட்டு- பாடல் வரிகள் - இசை - நடனம் - காட்சி அமைப்பு - என அனைத்தும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இருந்ததால் 'வா கண்ணம்மா..' சமூக வலைதளவாசிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் உற்சாகமடைந்த இசை ரசிகர்கள் அனைவரும் தமிழில் அறிமுகமாகும் ஹேஷாம் அப்துல் வஹாப்பிற்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் ஹாட்டின் + பூங்கொத்து இமோஜிகளுடன் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. விரைவில் படத்தின் முன்னோட்டம் மற்றும் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக கூடும் என படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

அர்ஜுன் தாஸ்- அதிதி ஷங்கர் - ஹேஷாம் அப்துல் வஹாப் - மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் - கூட்டணியில் தயாராகி வரும் 'ஒன்ஸ்மோர்' படத்தில் இடம்பெற்ற 'வா கண்ணம்மா..' எனும் பாடல் புதிய சாதனையை படைத்து வருவதால் இசையமைப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

Tags: Vaa Kannamma , Once More , Arjun Das, Aditi Shankar

Share via:

Movies Released On February 14