பிரபலங்களின் வாழ்த்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யா
28 Jun 2025
விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார். வரும் ஜூலை 4 படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பல திரை பிரபலங்களும், படத்தில் நடித்த நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டு பேசினர்.
நடிகர் முத்துக்குமார் முத்துக்குமார் பேசும்போது, "பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். என்னுடைய நண்பனின் மகன் சூர்யா நடிக்கும் முதல் படம். இந்த படத்தில் நானும் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். யார் என்ன சொன்னாலும் நேரடியாக சென்று கொண்டே இருங்கள் சூர்யா. நீங்கள் மிகப்பெரிய ஆளாக வருவீர்கள்! வாழ்த்துக்கள். ஒரு மாமனாக வாழ்த்துகிறேன்".
பாடலாசிரியர் விவேகா பேசும்போது, "மற்றவர்கள் படத்திலேயே அதிரடியான சண்டைக் காட்சிகள் வைக்கும் அனல் அரசு அவர்கள் தன்னுடைய படத்தில் இன்னும் சிறப்பாக வைத்துள்ளார். சாம் சி எஸ் அவர்கள் பிரமாதமாக இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் மிக சிறப்பாக வந்துள்ளது. விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா அவர்களின் முதல் படமே சிறப்பாக வந்துள்ளது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வருவதற்கு இந்த படமே ஒரு எடுத்துக்காட்டு. பீனிக்ஸ் என்பது ஒரு நம்பிக்கையின் குறியீடு. நம்பிக்கைதான் ஒரு வாழ்க்கையின் முக்கியமானது. நம்பிக்கைதான் நம்மை நகர்த்துகின்ற மிகப் பெரிய பலம். இந்த திரைப்படம் வெற்றி பெற வாழ்த்தி விடைபெறுகிறேன்".
நடிகர் மூணார் ரமேஷ் பேசும்போது, விஜய் சேதுபதி அவர்களுடனும் நடித்துள்ளேன், அவருடைய மகன் சூர்யாவுடனும் நடித்துள்ளேன். சண்டை பயிற்சிக்கான உலகளாவிய விருதிகளில் அனல் அரசு அவர்களின் பெயரும் இடம் பெற்று இருந்தது. அதை நாம் பெரிதாக கொண்டாடாமல் விட்டும். இந்த படத்திற்கு சாம் சி எஸ் சிறப்பாக இசையமைத்துள்ளார். இந்த படம் நிச்சயம் வெற்றியடையும்".
நடிகர் திலீபன் பேசும்போது, அனல் அரசு அவர்களின் படத்தில் நடிப்பது மிகவும் பெருமையாக உள்ளது. அவருடைய இயக்கத்தில் எந்த ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருந்தேன். சூர்யா அவர்கள் மிக அருமையாக நடித்துள்ளார். அவருக்கு நிச்சயம் பெரிய வெற்றி கிடைக்கும். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்".
நடிகை தேவதர்ஷினி பேசும்போது, "ட்ரெய்லர் மிகவும் சிறப்பாக உள்ளது. சூர்யா அவர்கள் சிறப்பாக நடித்துள்ளார். இது போன்ற படங்களில் நடிக்க மிகப்பெரிய கடின உழைப்பு தேவை. என்னுடைய மகன் நடித்தது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. அனல் அரசு அவர்களின் உழைப்பு ட்ரெய்லர் பார்க்கும்போது தெரிகிறது. அனைவரது கடின உழைப்பிலும் இந்த படம் உருவாகியுள்ளது. சாம் சிஎஸ் அவர்களின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து இந்த படத்தை பார்த்து பாராட்ட வேண்டும்".
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சக்திவேலன் பேசும்போது, "பத்திரிக்கையாளர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். தமிழகத்திலிருந்து சென்று ஹிந்தி, மலையாளம், கன்னடா என்று அனைத்து மொழிகளிலும் சிறந்து விளங்கும் ஒரு கலைஞர் என்றால் அது அனல் அரசு அவர்கள் தான். அவருடைய இயக்கத்தில் உருவாகும் முதல் படம் பீனிக்ஸ். ஒரு தமிழராக இருந்து ஹிந்தியில் 18 படங்களில் வேலை செய்துள்ளார். அதில் சல்மான் கான் உடன் மட்டும் 7 படம். தளபதி விஜய் அவர்களுடன் 9 படம் பணிபுரிந்துள்ளார். ஒரு முழு ஆக்சன் படமாக பீனிக்ஸ் உருவாகியுள்ளது. விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா ஒரு முழு ஆக்சன் ஹீரோவாக இந்த படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி அவர்களின் வெற்றி பலருக்கும் ஒரு உந்துதலாக இருந்தது. விஜய் சேதுபதி அவர்களின் வெற்றியைப் பார்த்து 100 பேர் வந்தால், அவரின் மகனின் வெற்றியை பார்த்து 200 பேர் வருவார்கள். விஜய் சேதுபதி அடையாளம் என்றால், சூர்யா ஒரு குறியீடு. படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சினிமாவை நேசித்து இந்த படத்தை எடுத்துள்ளனர். இந்தப் படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றி கொடுங்கள்".
தயாரிப்பாளர் டி சிவா பேசும்போது, "முழு படத்தையும் பார்த்து விட்டேன். மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட முதல் 10 படங்களில் பீனிக்ஸ் நிச்சயம் இடம்பெறும். 100% நேர்த்தியாக அனல் அரசு இந்த படத்தை எடுத்துள்ளார். ஒரு சீட் எச் திரில்லராக படம் உருவாகியுள்ளது. இந்த படம் நான் சொல்வது உண்மையில்லை என்றால் படத்தின் ரிலீஸ்க்கு பிறகு எனக்கு போன் போட்டு திட்டுங்கள். படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என அனைவரும் சிறப்பான வேலையை செய்துள்ளனர். இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இந்த ஆண்டுக்கான சிறந்த இயக்குனருக்கான விருதை அனல் அரசு அவர்கள் நிச்சயம் பெறுவார். சூர்யா அவர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. தமிழ் சினிமாவின் டைகர் ஷெராபாக நிச்சயம் சூரியா வருவார். தமிழ் சினிமாவில் நான் அடிக்கடி பார்க்கும் படம் மகாராஜா. இனிமேல் நான் அடிக்கடி பார்க்கும் படமாக பீனிக்ஸ் இருக்கும். சாம் சிஎஸ் இந்த படத்திற்கு சிறப்பாக இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி அவர்கள் தமிழ் சினிமாவிற்கு நிறைய விஷயங்களை கொடுத்துள்ளார், தற்போது அவரது மகனையும் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நான் மிகவும் நேசிக்கும் மனிதர் விஜய் சேதுபதி அவர்கள். அவரை தாண்டி அவரது மகன் மிகப் பெரிய ஆளாக வருவார். அனைவரும் திரையரங்கில் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்".
இயக்குனர் பாண்டிராஜ் பேசும்போது, "சூர்யா அவர்களுக்காக மட்டுமே இங்கு வந்துள்ளேன். அனல் அரசு அவர்களுடன் ஒரே ஒரு படம் மட்டும் தான் ஒர்க் பண்ணி உள்ளேன், அதிலும் ஒரே ஒரு பைட் சீன் தான். இருப்பினும் நாம் என்ன எடுக்கப் போகிறோம் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கும் ஒரு சில மாஸ்டர்களில் இவரும் ஒருவர். இந்த படத்தின் டிரைலர் பார்க்கும்போது படம் அற்புதமாக வந்துள்ளது தெரிகிறது. பசங்க படத்தில் கமிட் ஆகும்போது விஜய் சேதுபதி அவர்களை தெரியும். விஜய் சேதுபதி அவர்களிடம் மனிதாபிமானம் உள்ளது. சூர்யா அவர்களிடம் நல்ல ஒரு தெளிவு உள்ளது. பல நாட்களாக சினிமாவை கரைத்து குடித்தது போல் தெளிவான பேசினார். விஜய் சேதுபதி அவர்களைவிட, அவரது மகன் சூர்யா சிறப்பாக நடனமாடியுள்ளார். சண்டை காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். சண்டைக்கோழி படத்தில் விஷால் அவர்களை பார்க்கும்போது என்ன தோன்றியதோ அதேபோல் தான் இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது தோன்றுகிறது. விஜய் சேதுபதி அவர்களின் 10 படங்களை மீண்டும் மீண்டும் பார்த்தாலே சூர்யா நல்ல நடிகராக வந்துவிடலாம். ஒரு அண்ணனாக நானும் உங்களை வாழ்த்துகிறேன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய. வாழ்த்துக்கள்.
பெப்சி விஜயன் பேசும்போது, "சாதாரணமாக ஒருவர் வெற்றியடைய முடியாது. நல்ல ஒரு எமோஷனல் இல்லையென்றால் ஒரு சண்டை காட்சி வேலை செய்யாது. இயக்குனர் அனல் அரசு அவர்கள் இந்த படத்தை இயக்குவதற்கு நிறைய சிரமங்களை சந்தித்துள்ளார். சூர்யா அவர்களை இந்த படத்தில் நடிகராக அறிமுகம் செய்துள்ளார் அனல் அரசு. சிரித்துக் கொண்டே வேலை வாங்குவதில் அனல் அரசு மிகச் சிறந்தவர். சூர்யா அவர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கை உள்ளது. தன்னம்பிக்கை உள்ளவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். மக்களின் மனதை கவரும் தன்மை சூர்யா அவர்களிடம் உள்ளது. இந்தப் படம் உங்களுடைய வெற்றி என்று மார் தட்டி சொல்லலாம். சாம் சி எஸ் அவர்கள் சிறப்பாக இசையமைத்துள்ளார், குறிப்பாக பின்னணி இசையில் அசத்தியுள்ளார். அனல் அரசு அவர்கள் ஒவ்வொரு நடிகர் நடிகைகளையும் தேடித்தேடி இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன். தமிழ் சினிமா இருக்கும் வரைக்கும் நடிகர் சூர்யா நிச்சயம் இருப்பார். சூர்யா பேர் இல்லை பெருமை".
இயக்குனர் வினோத் பேசும்போது, "சூர்யாவை நான் அறிமுகப்படுத்தலாம் என்று இருந்தேன். ஆனால் அனல் அரசு முந்திவிட்டார். ஒரு ஹீரோ ஒரு ஆக்சன் ஹீரோ ஆவதற்கு 10 படங்கள் தேவைப்படும், ஆனால் சூர்யாவிற்கு முதல் படத்திலேயே அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்களின் கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்".
இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசும் போது, ஒரு காட்சி நன்றாக இருக்கிறது.. நன்றாக இல்லை என்று சொல்வதற்கு பின்னால் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. சண்டைக் காட்சிகளுக்கு ஏற்றவாறு முடிந்தவரை இசையமைக்க முயற்சிப்பேன். ஒரு படம் மக்களிடம் சென்று சேருவதற்கு கமர்சியல் விஷயங்கள் அவசியம். என்னுடைய தலையீடு இல்லாமல் என் மகன் சூர்யா திரைக்கு வரட்டும் என்று விஜய் சேதுபதி அவர்கள் சொல்லி இருந்தார். பீனிக்ஸ் படத்தை பார்த்துவிட்டு விஜய் சேதுபதியிடம் சொன்னேன் உங்கள் மகன் சிறப்பாக நடித்துள்ளார் என்று. இந்த படத்தின் வேலைகளை முடிக்கும் போது ஒரு திருப்தி இருந்தது. என்னுடைய சினிமா கரியரில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். அனல் அரசு அவர்கள் ஒரு லட்சியமாக இந்த படத்தை இயக்கியுள்ளார். பீனிக்ஸ் படம் எனக்கும் சூர்யா அவர்களுக்கும் நல்ல ஒரு பெயரை பெற்று தரும். இந்த படத்தில் வேலை பார்த்தது மிகவும் பெருமையாக உள்ளது. இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்".
விஜய் சேதுபதி பேசும்போது, "என்னுடைய மகனைப் பற்றி என்ன பேசுவது என்று தெரியவில்லை. அனல் அரசு அவர்களுக்கு மிகப் பெரிய நன்றி. 2019ல் எனக்கு அனல் அரசு அவர்கள் கதையை சொன்னார், ஆனால் அப்போது அதனை பண்ண முடியவில்லை. பிறகு சூர்யா இந்த கதையில் நடித்தால் எப்படி இருக்கும் என்று கேட்டார், எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது. என் பையனின் முடிவுகளை அவரே எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். சூர்யாவை கதை கேட்கச் சொன்னேன், அதன் பிறகு அதைப்பற்றி நான் எதுவுமே பேசவில்லை. என்னுடைய சினிமா அனுபவங்களை எப்போதும் என் குடும்பத்தில் பகிர்ந்து கொள்வேன். அவருடைய விஷயங்களை அவர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் படத்தின் பூஜை மற்றும் மற்ற விஷயங்கள் எதிலும் நான் கலந்து கொள்ளவில்லை. சூர்யாவிடம் அவ்வப்போது மகிழ்ச்சியாக உள்ளதா? என்று கேட்பேன். அவரும் உள்ளது என்பார்.. அவ்வளவுதான். அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அனைவருக்கும் நன்றி. அனல் அரசு மூலமாக அவர் சினிமாவில் அறிமுகமாவது ஒரு பாக்கியம் என்று நினைக்கிறேன். இங்கே வந்து சூர்யா அவர்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள். படம் நன்றாக வந்துள்ளது. என்னை விட என் மனைவிக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியான தருணம் இது. அவர்களின் சார்பிலும் நான் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்".
கதையின் நாயகன் சூர்யா சேதுபதி பேசும்போது, "இந்த மேடையை நான் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க பயன்படுத்தி கொள்கிறேன். கடந்த இரண்டு வருடங்களாக நான் நிறைய கற்றுக் கொண்டேன். இன்று நான் இந்த இடத்தில் நிற்பதற்கு எனது குடும்பமும், நண்பர்களும், பத்திரிகையாளர்களும் தான் காரணம். அடுத்த வாரம் படம் வெளியாக உள்ளது. நான் சோர்வாக இருக்கும் போது எனக்கு உத்வேகம் அளித்து இந்த படத்தில் நடித்த அனைவரும் உதவினார்கள். தேவதர்ஷினி அவர்கள் படத்தில் மட்டும் அம்மா இல்லை, நிஜ வாழ்க்கையிலும் எனது அம்மா தான். என் தயாரிப்பாளர் ராஜலட்சுமி அவர்களுக்கு நன்றி. இயக்குனர் அனல் அரசு அவர்கள் நிறைய சொல்லிக் கொடுத்தார். அனைவரும் திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கள்".
இயக்குனர் அனல் அரசு அவர்கள் பேசும்போது, "இந்த இடத்திற்கு வருவதற்கு எனது அப்பா மிக முக்கிய காரணம். தயாரிப்பாளர் ராஜலட்சுமி இல்லையென்றால் இந்த படமே இல்லை. இந்த படத்தை மிகப்பெரிய படமாக மாறியதற்கு இவரும் முக்கிய காரணம். ஜவான் படத்தின் படப்பிடிப்பில் தான் சூர்யா அவர்களை முதன் முதலில் பார்த்தேன். அதன் பிறகு தான் விஜய் சேதுபதி அவர்களிடம் சொன்னேன். ஒன்றரை வருடமாக சூர்யா அவர்கள் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்தார். சூர்யா அவர்களுக்கு மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது. படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னீசியன்களும் கடமையாக உழைத்துள்ளனர். சண்டை பயிற்சி இயக்குனராக 200 படங்கள் பண்ணி இருந்தாலும், ஒரு இயக்குனராக என்னுடைய முதல் படம் எது. அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும்".
படத்தின் தயாரிப்பாளர் ராஜலட்சுமி அவர்கள் பேசும்போது, "எல்லாருக்கும் ரொம்ப நன்றி. இங்கு வந்த பத்திரிகையாளர் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றிகள். இந்த படத்தை அனைவரிடமும் கொண்டு போய் சேர்ப்பீர்கள் என்று நம்புகிறோம். என்னுடைய மகன் மற்றும் மகளுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றிகள்".
Tags: phoenix, anal arasu, suriya vijay sethupathi