தெலுங்குப் படத்திற்கு ‘பராசக்தி’ தலைப்பு வைக்கலாமா விஜய் ஆண்டனி ?

29 Jan 2025

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் அறிமுகப்படம், கலைஞர் கருணாநிதியின் அனல் பறக்கும் வசனங்கள் என 1952ம் ஆண்டு வெளிவந்த ‘பராசக்தி’ திரைப்படம் அந்தக் காலத்திலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

படம் வெளியாகி 73 வருடங்கள் ஆனாலும், அந்தப் படத்தின் வசனங்களும், சிவாஜிகணேசனின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் பெருமையை இன்றைக்கும் பேசிக் கொண்டிருக்கும் அந்தப் படத்தின் தலைப்பை ஒரு தெலுங்குப் படத்திற்கு வைத்திருக்கிறார் தயாரிப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி.

தமிழில் ‘சக்தித் திருமகன்’ என்று வைத்துள்ள படத்தின் தெலுங்கு டப்பிங்கிற்கு ‘பராசக்தி’ என்று பெயர் வைத்திருப்பது சரியா விஜய் ஆண்டனி ?.

இந்தப் படத்தின் தலைப்பைப் பயன்படுத்துவதற்கு அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான பாரம்பரியம் மிக்க ஏவிஎம் நிறுவனம் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்க சுதா கோங்கரா இயக்கும் படத்திற்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.

அவர்கள் இந்த ‘பராசக்தி’ படத் தலைப்பைப் பயன்படுத்துவதற்கே கலைஞரின் சினிமா ரசிகர்களும், சிவாஜிகணேசனின் சினிமா ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இருந்தாலும் ஹிந்தி எதிர்ப்பை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்திற்கு அத்தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்றும் ஒரு கருத்து உள்ளது.

இப்போதைய ‘பராசக்தி’ குழுவினர் அதற்கான உரிமையை ஏவிஎம் நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளதை வெளியிட்டுள்ளார்கள். ஆனால், நீங்கள் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அத்தலைப்புக்கு அனுமதி வழங்கிய கடிதத்தை வெளியிட்டுள்ளீர்கள்.

‘பராசக்தி’  தமிழ்ப் படக்குழுவினர் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அனுமதி வழங்கிய கடிதத்தை வெளியிட்டுள்ளார்கள்.

சினிமாவைப் பொறுத்தவரையில் பழைய தலைப்பை வைப்பவர்கள், அந்தப் படத்தைத் தயாரித்த நிறுவனத்திடமிருந்து அனுமதி வாங்கி வைப்பதைத்தான் பல வருடங்களாக செய்து வருகிறார்கள். அப்படி எதுவும் அனுமதி வாங்கி இருக்கிறீர்களா என்பதைத் தெரியப்படுத்தவும்.

Tags: parasakthi, vijay antony

Share via:

Movies Released On February 14