ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் 'பறந்து போ'

09 Feb 2025

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தயாரிப்பில் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான 'பறந்து போ' திரைப்படத்தின் முதல் உலக ப்ரத்யேக காட்சி 54-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

'பறந்து போ' திரைப்படத்திற்கு இருக்கும் எதிர்ப்பார்ப்பை உறுதிப்படுத்தும் விதமாய் முதல் காட்சி இருந்தது. ரோட்டர்டாமின் உறையும் குளிரிலும் அரங்கம் நிரம்பியது, மேலும் திரைப்படத்தின் இறுதியில் எழுந்த அரங்கம் அதிர்ந்த கைதட்டல்கள் பார்வையாளர்களின் எதிர்ப்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததை உறுதிபடுத்தியது.

இத்திரையிடலை இயக்குநர் ராமுடன், நடிகர் சிவா, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தமிழ் தலைமை பொறுப்பாளர் ப்ரதீப் மில்ராய், குழந்தை நட்சத்திரம் மிதுல் ரியான் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நகைச்சுவையை மையமாக கொண்ட எளிமையான கதையமைப்புடன் உருவாகி இருக்கும் 'பறந்து போ' திரைப்படம், சர்வதேசப் பார்வையாளர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. படம் நெடுக கைதட்டியும் கரகோஷத்தை எழுப்பியும் உற்சாகத்துடன் பார்வையாளர்கள் இத்திரைப்படத்தை கண்டுகளித்தனர்.  திரையிடலின் முடிவில் நடைபெற்ற கலந்துரையாடலில் படக்குழுவினரை பார்வையாளர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.

'பறந்து போ' திரைப்படம் கோடை விடுமறையில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் எனவும் இத்திரையிடலில் இருந்தது போல திரையரங்குகளில் பெரும் கொண்டாட்டமாக இருக்கும் எனவும் இயக்குநர் ராம் கலைந்துரையாடலின் போது தெரிவித்தார்.

ஒட்டுமொத்தத் திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் பெருமிதமும், மகிழ்ச்சியும் தந்த தருணமாக 'பறந்து போ' திரைப்படத்தின் சர்வதேசத் திரையிடல் நிகழ்ச்சி அமைந்தது.

Tags: paranthu po

Share via: