'மகாராஜா' வெளியீடு ஒத்திவைப்பு: காரணம் என்ன?
11 May 2024
மே வெளியீட்டில் இருந்து 'மகாராஜா' திரைப்படம் பின்வாங்கியது ஏன் என்பது தெரியவந்துள்ளது.
நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மகாராஜா’. இது விஜய் சேதுபதியின் 50-வது படமாகும். இதனால் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக இது மாறியுள்ளது. அதுமட்டுமன்றி திரையுலகில் பலர் இந்தப் படத்தினைப் பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டி இருக்கிறார்கள்.
இதன் ஓடிடி உரிமையை ஃநெட்ப்ளிக்ஸ், தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி ஆகியவை கைப்பற்றியுள்ளது. முதலில் இந்தப் படத்தினை மே 17-ம் தேதி வெளியிட முடிவு செய்து பணிகளைத் துவக்கியது படக்குழு. ஆனால், ஓரிரு நாட்களிலேயே அனைத்து பணிகளையும் நிறுத்திவிட்டது.
இதற்கு காரணம் ஃநெட்ப்ளிக்ஸ் என்கிறார்கள். ஏனென்றால், மே 17-ம் தேதி வெளியீடு என்றால், ஜுனில் ஃநெட்ப்ளிக்ஸ் தளத்தில் படத்தினை வெளியிட வேண்டும். ஆனால், அதே மாதத்தில் ஃநெட்ப்ளிக்ஸ் தளத்தில் ‘மகாராஜ்’ என்ற வெப்சீரிஸ் வெளியாகவுள்ளது. இதில் ஆமிர்கானின் மகன் ஜுனைத் கான் நடித்துள்ளார். இதனை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இதனால், ‘மகாராஜா’ படத்தினை தள்ளிவெளியிடுங்கள் என்று கூறிவிட்டது ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம். இதன் காரணமாக ஜூலையில் வெளியிடலாம் என்ற முடிவினை எடுத்துள்ளது தயாரிப்பு தரப்பு.
Tags: maharaja, vijay sethupathi