ஆபாச கமெண்ட்டுகள், அஜித் ரசிகர்கள் மீது கஸ்தூரி ஆவேசம்

12 Mar 2020

சமூக வலைத்தளங்களில் சில நடிகர்களின் ரசிகர்கள் என்று கூறிக் கொண்டு வரம்பு மீறி செயல்படும் பலர் இருக்கிறார்கள். அவர்களது அபிமான நடிகர்களைப் பற்றி ஏதாவது ஒரு வார்த்தை சாதாரணமாகக் கூட சொல்லிவிட்டால் போதும் உடனே சண்டைக்கு வருவார்கள். சமயங்களில் அந்த சண்டை எல்லை மீறி நடப்பதும் உண்டு.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர் நடிகை கஸ்தூரி. அவருக்கு அஜித் ரசிகர்கள் சிலர் தொடர்ந்து ஆபாச கமெண்ட்டுகளைப் பதிவிட்டு அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர்.

அருவெறுப்பான ஆபாசமான கமெண்ட்டுகளைப் பதிவிட்ட அவர்களில் சிலர் மீது நடவடிக்கை எடுக்கும்படி நடிகை கஸ்தூரி டிவிட்டர் நிறுவனம், அஜித், அஜித் மேனேஜர் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அந்த வேண்டுகோளை டிவிட்டர் நிறுவனம் உடனடியாக ஏற்று குறிப்பிட்ட ஒரு நபரின் கணக்கை நீக்கியுள்ளது.

கடந்த வாரம்தான் அஜித் தான் எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் இல்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். சமூக வலைத்தளங்களில் யாருக்கும் தன் ஆதரவு இல்லை என்று அவர் அறிவித்த போதும், அவரது ரசிகர்கள் என்ற போர்வையில் இப்படி நடப்பவர்களை டிவிட்டர் நிறுவனம்தான் உடனடியாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அஜித்திற்கு ரசிகர் மன்றம் என்று எதுவும் கிடையாது. அவற்றை பல வருடங்களுக்கு முன்பே அவர் நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ajith, ajith fans, kasthuri

Share via: