அரசியல் கதவை மூடிவிட்டாரா ரஜினிகாந்த் ?

12 Mar 2020

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என கடந்த இரண்டு வருடங்களாகவே அடிக்கடி தகவல்கள் உலா வந்தன.

இந்நிலையில் இன்று காலை சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர் மட்டுமே பேசினார்.

“அரசியலில் தற்போது பெரிய வெற்றிடம் உள்ளது. இப்போது அரசியலில் நுழைந்தால்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும். தனக்கு முதல்வர் ஆகும் ஆசை எப்போதும் இருந்ததில்லை. கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன். ஒரு ஆலோசனைக் குழு அமைத்து அவர்கள் சொல்லும் யோசனைகளை செயல்படுத்தும் ஒரு சிஇஓ-வாகத்தான் முதல்வர் இருக்க வேண்டும்.

இளைஞர்கள், பெரிய பதவிகளில் இருந்து ஓய்வு பெற்ற படித்தவர்கள், மற்ற கட்சிகளில் இருந்து வரும் நல்லவர்கள் என அவர்களுக்கு வாய்ப்புத் தரும் எண்ணம் இருக்கிறது. 

ஒரு கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திக்க வேண்டுமென்றால் 50 ஆயிரம் கட்சிப் பதவிகள் வேண்டும். நான் கட்சி ஆரம்பித்தால் அந்தப் பதவிகளை தேர்தல் முடிந்ததும் நீக்கி விடுவேன், என்று ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. அரசியலுக்கு சேவை மனப்பான்மையுடன்தான் வரவேண்டும்.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஆள் பலம், பண பலத்துடன் இருக்கின்றன. அவற்றை எதிர்த்து அரசியல் செய்வது சாதாரணமானதல்ல.

இங்கு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டிய எழுச்சி இன்னும் வரவில்லை. அப்படி ஒரு எழுச்சி வந்தால் அரசியலுக்கு வருவேன்,” என்பதுதான் அவருடைய பேச்சின் சுருக்கம்.

2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் தன் ரசிகர்கள் முன்னிலையில் பேசிய போது ‘போர்’ இன்னும் வரவில்லை, அது வரட்டும் என்றார். இப்போது ‘எழுச்சி’ வரட்டும் வருகிறேன் என்கிறார்.

இனி மேலும், கட்சி ஆரம்பித்து ரஜினிகாந்த் தேர்தலில் போட்டியிடுவார் என்ற நம்பிக்கை அவருடைய ரசிகர்களுக்கே போய்விட்டது.

ரஜினிகாந்த் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய நட்சத்திர ஓட்டல் முன் குழுமிய ரசிகர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் ரஜினியின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்து அவரைக் கண்டபடி திட்டியதாகவும் சொன்னார்கள்.

நேற்று ‘எங்கள் முதல்வர் ரஜினிகாந்த்’ என்றெல்லாம் டிவிட்டரில் டிரென்டிங் கொண்டு வந்த ரசிகர்கள், ஒரே நாளில் ரஜினி பற்றி பதிவிடுவதை நிறுத்திவிட்டனர். ஒரு சிலர் மட்டுமே ரஜினி மனதில் இருந்ததை வெளிப்படையாகப் பேசினார் என்றார்கள்.

நேற்று இரவு முழுவதும் சமூக வலைத்தளங்களில் ரஜினிகாந்த் தான் அடுத்த முதல்வர் என்றெல்லாம் கருத்தும், கமெண்ட்டும் போட்டு பரபரப்பைக் கூட்டிய ரஜினி ரசிகர்கள் இன்று தங்கள் கதறல் வெளியில் தெரியாமல் எந்த கருத்தும் பதிவிடாமல் உள்ளுக்குள் அழுது கொண்டிருக்கிறார்கள்.

ரஜினி கட்சி ஆரம்பிப்பார், அப்போது கட்சியில் இருந்து பதவி பெற்று சம்பாதிக்கலாம், அல்லது உண்மையாகவே சேவை செய்யலாம் என்று நினைத்து கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக காத்துக் கொண்டிருக்கும் 50 வயதைக் கடந்த ரஜினி ரசிகர்கள் மிகப் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதற்கு மேலும் சில கட்சிகள் ரஜினி அரசியலுக்கு வருவார் என்றோ, சில மீடியாக்கள் ரஜினி பற்றி தொடர் செய்திகள் வெளியிடுவதையோ செய்ய மாட்டார்கள் என்றே பலரும் நினைக்கிறார்கள்.

25 வருடங்களுக்கு முன்பு தன் அரசியல் கதவை லேசாகத் திறந்த ரஜினி, இன்று முழுவதுமாகத் திறப்பார், அதில் பலர் வர வழிவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், தன் அரசியல் கதவை முழுவதுமாக மூடிவிட்டார் என்றே மக்கள் நினைக்கிறார்கள்.

Tags: rajinikanth, tn politics, super star, rajinikanth political entry

Share via: