விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடிக்கும் ‘இரண்டு வானம்’
18 Mar 2025
சத்ய ஜோதி பிலிம்ஸ், தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் வழங்க, 'முண்டாசுப்பட்டி' & 'ராட்சசன்' படங்களின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் மீண்டும் இணையும் புதிய திரைப்படம் ‘இரண்டு வானம்’
கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக பல வெற்றிகரமான திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது.
தமிழ் சினிமா ஜாம்பவான்களான வீனஸ் பிக்சர்ஸ் கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் ஆர்.எம். வீரப்பன் ஆகியோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, சத்ய ஜோதி பிலிம்ஸ் நான்கு தலைமுறைகளாகத் திரைப்படங்களைத் தயாரித்து சாதனை படைத்து வருகிறது.
எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார் மற்றும் தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் சூப்பர் ஹிட் படங்களைக் கடந்த 1950களில் இருந்து தயாரித்து வரும் இந்த பழம்பெரும் தயாரிப்பு நிறுவனம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட பல படங்களுடன் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளையும் படைத்து வருகிறது.
தற்போது ‘இரண்டு வானம்’ என்ற மற்றொரு நம்பிக்கைக்குரிய திரைப்படத்தின் மூலம் பார்வையாளர்களை மீண்டும் கவர்ந்திழுக்கத் தயாராகி உள்ளது.
'முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ என தமிழ் சினிமாவில் வித்தியாசமான வெற்றிப் படங்களைக் கொடுத்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் ஆகியோர் ‘இரண்டு வானம்’ படம் மூலம் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன் கூறுகையில், “உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு சிறந்த படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் நோக்கம். ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்களில் இருந்து பல ஆண்டுகளாக தொடர்ந்து எங்களுக்குக் கிடைத்து வரும் அன்பும் ஆதரவும் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தற்போது ‘இரண்டு வானம்’ என்ற எங்களது புதிய படத்தை அறிவிப்பது மகிழ்ச்சி. வெற்றிகளைக் குவித்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள். முந்தைய படங்களைப் போலவே, இந்தப் படமும் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும்.
நடிகை மமிதா பைஜுவுடன் இந்தப் படத்தில் பணிபுரிந்திருக்கிறோம். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தின் டைட்டில் வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
டிரைலர், ஆடியோ மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவோம். படத்தின் புரமோஷனையும் விரிவாக செய்ய திட்டமிட்டிருக்கிறோம்,” என்றார்.
Tags: irandu vanam, vishnu vishal, mamita baiju