ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரித்திருக்கும் படம் ‘பார்டர்’. 

அறிவழகன் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையமைப்பில், அருண் விஜய் ரெஜினா கசான்ட்ரா, அறிமுக நடிகை ஸ்டெபி பட்டேல் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

தேசபக்தி கொண்ட ஆக்சன் என்டர்டெய்ன்மென்ட் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. 

இப்படத்தில் துணிச்சலான, சவாலான புலனாய்வுத் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அருண் விஜய். இந்த கதாபாத்திரத்திற்காக அவர் கடுமையாக உழைத்து, ஒத்திகையும், பயிற்சியும் செய்து சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார். அதிலும் கொரோனா தொற்று பரவல் இருந்த காலகட்டத்தில், படத்தின் பணிகளை நிறைவு செய்வதற்காக படக்குழுவினருக்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்திருக்கிறார். குறிப்பாக டெல்லி, ஆக்ரா மற்றும் அஜ்மீர் ஆகிய நகரங்களின் வீதிகளில் நடைபெற்ற படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு முழுமையான ஒத்துழைப்பை அளித்திருக்கிறார்.

இந்தப்படத்தில் அறிமுக நடிகை ஸ்டெபி பட்டேல், நாயகன் அருண் விஜய்யின் காதலியாக, ஜோடியாக நடித்திருக்கிறார்.  ரெஜினா கசாண்ட்ரா, அருண் விஜயுடன் பணியாற்றும் புலனாய்வுத் துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவரும் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறார். இதற்காக சிறப்பு பயிற்சியும் பெற்றுள்ளார். பக்ஸ் என்ற பகவதி பெருமாள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இயக்குனர் அறிவழகன் மற்றும் அவரது குழுவினர், கொரோனா பாதிப்பு காலகட்டத்திலும் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, படத்தின் இறுதிகட்ட பணிகளை நிறைவு செய்துள்ளனர். 

இப்படத்தை 11 :11 புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளிலும் வெளியிடுகிறார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது, அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரலாம்.

இப்படத்தின் டிரைலரை சூர்யா, கார்த்தி. ஜெயம் ரவி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.