நான் பேயாக நடித்த படங்கள் வெற்றி - நிக்கி கல்ரானி

12 Sep 2021

ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ராம்பாலா இயக்கத்தில், விக்ரம் செல்வா இசையமைப்பில், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘இடியட்’.

நிகழ்சசியில் இசையமைப்பாளர் விக்ரம் செல்வா பேசியதாவது, 

‘தில்லுக்கு துட்டு’ படத்தின் போதே ராம்பாலாவை சந்தித்து வாய்ப்பு கேட்டிருந்தேன். அவர் ஞாபகம் வைத்து இந்தப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்தார். இந்த படத்தில் பங்கு பெற்ற பெரிய நட்சத்திரங்கள்  புதுமுகமான என்னை ஒப்புக்கொண்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப்படம் வித்தியாசமான காமெடி படமாக இருக்கும். முதலில் இரண்டு பாடல்கள் இருந்தது. இடையில் கதையில் சில மாற்றங்களைச் செய்ததால், ஒரு பாட்டை எடுத்து விட்டோம். இந்தப்படம் மிக வித்தியாசமான அனுபவமாக  இருக்கும். ஒரு காமெடி காட்சி வந்தால் அடுத்து உடனே சீரியஸ் காட்சி  வரும். படம் உங்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும். 

நடிகர் ஆனந்த்ராஜ் பேசுகையில்,

ராம்பாலா மிக நல்ல மனிதர். அவர் ஒரு காமெடி கடல். அவரின் திறமையை யாராலும் திருட முடியாது.  அவருடன் தில்லுக்கு துட்டு படத்தில் இணைந்து பணியாற்றினேன். இரண்டாம் பாகத்தில் நடிக்க முடியவில்லை. இப்போது இந்தப்படம் மிக நன்றாக வந்திருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஓடிடி யில் படத்தை கொடுத்துவிடும் இக்காலத்தில் தியேட்டரில் இப்படத்தை வெளியிட வேண்டும் என உறுதியாக இருந்ததற்கு நன்றி. தியேட்டர் அனுபவம் என்பது மிகச்சிறப்பான ஒன்று. அது ஆலயம் போன்றது. இந்தப்படம் அடுத்தவாரம் திரைக்கு வருகிறது. திரையரங்கில் அனைவரும் கொண்டாடுவார்கள். மிர்ச்சி சிவா உடன் முதல் முறையாக நடித்திருக்கிறேன். அவர் படிப்படியாக வளர்ந்து முழு சந்திரமுகியாக மாறியிருக்கிறார். மிகச்சிறப்பாக நடித்துள்ளார். நிக்கி கல்ராணி என் தோழி, அவரும் நானும் இணைந்து நடித்த அனைத்து படங்களுமே ஹிட். இந்தப்படமும் ஜெயிக்கும். இப்படத்தில் பணியாற்றிய தொழில் நுட்பக் குழுவினர், நடிகர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். இந்த மேடையில் தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். சிறு படங்களின் தேவைகளை நிவர்த்தி செய்து அவற்றை வாழ வைக்க வேண்டும் என கேட்டுகொள்கிறேன். 

நிக்கிகல்ராணி பேசியதாவது,

இத்தனை மாதம் கடந்து அனைவரையும் சந்தித்ததில் சந்தோஷம். கொரோனா காலத்தில் ராம்பாலா சார் அழைத்து இந்த வாய்ப்பை பற்றி சொன்னார். இந்தப் படத்தின் அனுபவமே சிறப்பாக இருந்தது. போன வருடம் கொரோனா காலத்தில் உலகமே மன அழுத்தத்தில் இருந்தபோது, நான் இந்தபடக்குழுவினருடன் மகிழ்ச்சியாக இருந்தேன். மயில்சாமி, ஆனந்த்ராஜ், மனோகர், மிர்ச்சி சிவா அனைவருடனும் நடித்தது, சந்தோஷம். இப்படத்திற்கு ராஜா அட்டகாசமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். ஓடிடியில் மிக எளிமையாக விற்றுவிடும் வாய்ப்பு இருந்தும், தியேட்டரில் ரசிகர்கள் ரசிக்க வேண்டுமென, இப்போது தியேட்டரில் வெளியிடும் தயாரிப்பாளருக்கு நன்றி. ஏற்கனவே ‘டார்லிங், மரகத நாணயம்’ படங்களில் பேய் கேரக்டர் செய்துள்ளேன். அந்தப் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே போல் “இடியட்” படமும் மிகப் பெரிய வெற்றி பெறும். இந்தப் படம் உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தும். 

இயக்குநர் ராம் பாலா பேசுகையில்,

‘இடியட்’ படத்தில் நிறைய கலகலப்பான சம்பவங்கள் நடந்தது. யார் யாரை இடியட் ஆக்கியுள்ளார்கள் என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஒளிப்பதிவாளர் ராஜா, எடிட்டிங் முடித்து அவரது ஒளிப்பதைவை பார்த்து விட்டேன் நன்றாக செய்துள்ளார். மிர்ச்சி சிவா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். நிக்கி கல்ராணி நிறைய கேள்வி கேட்பார், எல்லா லாஜிக்க்கும் அவருக்கு சொல்ல வேண்டும், மிகச்சிறப்பான நடிகை. நடிகர் ரவி மரியாவை முன்பிருந்தே தெரியும், அவரை வில்லனாகத்தான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு படத்தில் காமெடியில் கலக்கியிருந்தார். அவரது பாடி லாங்குவேஜ் அட்டகாசமாக இருக்கும். ஆனந்தராஜ் எனக்கு சீனியர், முரட்டுத்தனமான ஒரு ஆள் முட்டாள்தனமாக இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்தபோது அதற்கு பொருத்தமாக ஆனந்தராஜ் இருந்தார். ஊர்வசி மேடத்துடன் மூன்று படங்கள் செய்திருக்கிறேன், இன்னும் பல படங்கள் செய்வேன். மயில்சாமி மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். அடுத்த படத்தில் அவருக்கு ஃபாரின் மாப்பிள்ளை வேடம் தான். எனது உதவியாளர்கள் தான் இந்தப் படம் சரியாக உருவாக துணையாக இருந்தார்கள். சிவா காலையில் ஷூட்டிங்கிற்கு வரும்போதே, சிரித்து கொண்டே வருவார், முடிந்து செல்லும் போதும் அந்தப் புன்னகை அப்படியே இருக்கும். ஜனங்களை குஷிப்படுத்தும் படமாக சிரிக்க வைக்கும் படமாக இப்படம் இருக்கும். 

நடிகர் மிர்ச்சி சிவா பேசியதாவது,

இரண்டு வருடங்கள் கடந்து  எல்லோரையும் பார்ப்பதில் மகிழ்ச்சி. இந்த கொரோனா நிறைய கற்றுக்கொடுத்துவிட்டது. கொரோனா உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் ராம்பாலா சார் இந்தப் படத்தைப் பற்றிச் சொன்னார், ஆனால் அப்படிப்பட்ட நேரத்திலும் அனைவரையும் ஒன்று சேர்த்து படத்தை துவக்கி விட்டார் தயாரிப்பாளர் சுந்தர். அவரது வாழ்வைக் கேட்டால் பிரமிப்பாக இருக்கும். ஒளிப்பதிவாளர் ராஜா எப்போதுமே சிரித்த முகமாக இருப்பார். நிக்கி கல்ராணி போல அர்ப்பணிப்பு கொண்ட நடிகையை, பார்க்க முடியாது. ஒரு காட்சியில் அவர் டெட்பாடியாக இருக்க வேண்டும், ஆனால் அதற்கே நிறைய டவுட் கேட்டார். அந்தளவு சீரியஸான நடிகை. நடிகர் ஆனந்த்ராஜ் உலகத்தில் எதைப் பற்றி வேண்டுமானாலும் அவரிடம் பேசலாம் ஆனால் நடிப்பில் அசத்திவிடுவார். மயில்சாமி பிரமிப்பு தரும் மனிதர். தமிழ்நாட்டில் உள்ள சிவ ஆலயங்களுக்கு, அவர் செய்யும் கொடைகள் பெரிது. அவரிடம் பெரிய மரியாதை உள்ளது. டீம் கேப்டன் நன்றாக இருந்தால் தான் எல்லோரும் நன்றாக இருக்க முடியும். எங்கள் டீமிலேயே பெரிய ‘இடியட்’ ராம்பாலா சார் தான். உண்மையிலேயே அவரின் உழைப்பு அவர் அமைக்கும் காட்சிகள் எல்லாமே அட்டகாசமாக இருக்கும். இன்னும் நிறைய படங்கள் அவர் செய்ய வேண்டும். தியேட்டரில் தான் இந்தப்படத்தை வெளியிட வேண்டும் என்றார் தயாரிப்பாளர், அவரின் நம்பிக்கைக்கு நன்றி. ஒரு பேய் எப்போதும் இருட்டில், மியூசிக்கில் பயமுறுத்தும், ஆனால் அது இந்தப்படத்தில் இருக்காது. அதனால் தான் இந்தப் படத்தை ஒப்புக்கொண்டேன். படத்தின் ரகசியத்தை சொல்லிவிட்டேன் ஆனாலும், இந்தப்படம் உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தும் நன்றி.

‘இடியட்’, விரைவில் திரைக்கு வர உள்ளது.

Tags: idiot, mirchi siva, nikki galrani, rambala

Share via:

Movies Released On October 21