இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’

22 Apr 2021

ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிப்பில், நந்தா பெரியசாமி இயக்கத்தில், சித்துகுமார் இசையமைப்பில் சேரன், கௌதம் கார்த்திக், ஷிவாத்மிகா ராஜசேகர், சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’.

இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்லில் பரபரப்பாக நடந்து வருகிறது.

படம் பற்றி தயாரிப்பாளர் ரங்கநாதன் கூறுகையில், “ஆனந்தம் விளையாடும் வீடு” படம் உருவாகி வரும் விதம், மனதிற்கு மிகுந்த திருப்தியை அளித்துள்ளது. இயக்குநர் நந்தா பெரியசாமி கதையை என்னிடம் கூறியது போலவே, படத்தையும் மிக அழகாக செதுக்கி வருகிறார்.

குறிப்பாக சேரன் மற்றும் கௌதம் கார்த்திக் பங்குபெறும் காட்சிகள் மிக அற்புதமாக உருவாகியுள்ளது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை திண்டுக்கல் பகுதியில் துவக்கியுள்ளோம்.

குடும்ப உறவுகளை மையப்படுத்திய திரைப்படத்தில், பல பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடிப்பதும்,  படப்பிடிப்பில்  குடும்ப உறுப்பினர்களைப் போலவே பழகுவதும் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது.

திண்டுக்கல் மக்களும் தங்கள் குடும்பத்தினரைப் போலவே படக்குழுவை கொண்டாடியது படத்தினை திரையரங்கிலும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் எனும்  நம்பிக்கையைக் கூட்டியுள்ளது.  

பொதுமுடக்கம் முற்றிலும் நீங்கிய பிறகு,  செண்டிமெண்ட், காமெடி, ஆக்சன், பொழுதுபோக்கு அனைத்தும் சரி விகிதத்தில் கலந்து குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக  ரசிகர்களுக்கு இப்படத்தைத் தருவோம்,” என்கிறார்.

Tags: cheran, gautham karthik, nanda periyasami, sidhukumar, snehan

Share via: