விடுதலை - ரஜினி படப் பெயரில் சூரியின் புதிய படம்

22 Apr 2021

ஆர்எஸ் இன்பொடெயின்மென்ட் தயாரிப்பில், வெற்றி மாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘விடுதலை’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், விஷ்ணுவர்த்தன், மாதவி மற்றும் பலர் நடிக்க 1986ம் ஆண்டில் வெளிவந்த படம் ‘விடுதலை’. அப்படத்தின் பெயரையே தன்னுடைய படத்திற்கும் வைத்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பவானிஸ்ரீ கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மின்சாரம் இல்லாத, தொலைத் தொடர்பு வசதி கூட இல்லாத சத்தியமங்கலம் காட்டுப்பகுதிகளில் படமாகி வருகிறது. படக்குழுவினர் அங்கேயே தங்குவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.

தனது குரு பாலுமகேந்திராவுடன் பல படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் இளையராஜாவுடன் வெற்றிமாறன் இணையும் முதல் படம் இது.

இன்று இப்படத்தின் முதல் பார்வைகளை வெளியிட்டுள்ளார்கள். கதாநாயகனாக உயர்ந்துள்ள சூரிக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

படம் பற்றி சூரி “என் வாழ்வில் இந்த முக்கிய தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன் அண்ணனுக்கும், இசைஞானி ஐயா இளையராஜா சார் அவர்களுக்கும், எல்ரெட் குமார் சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். புதிய பரிமாணத்தில் மாமா விஜய் சேதுபதியுடன் இணைவதில் மகிழ்ச்சி,” என டிவீட் செய்துள்ளார்.

Tags: vetri maaran, ilaiyaraaja, soori, vijay sethupathi

Share via: