வாரிசு – விமர்சனம்
12 Jan 2023
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்து வந்த விஜய் ஒரு இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள குடும்ப சென்டிமென்ட் படம். இருந்தாலும் கொஞ்சம் ஆக்ஷன், கொஞ்சம் பன்ச் வசனம், ஒரு அதிரடி நடனம் என தனது ரசிகர்களையும் திருப்திப்படுத்தியிருக்கிறார் விஜய்.
சரத்குமார் இந்தியாவின் மிகப் பெரிய பிசினஸ்மேன். அவருக்கு உதவியாக மகன்கள் ஸ்ரீகாந்த், ஷாம் இருக்கிறார்கள். கடைசி மகனான விஜய் அப்பாவுடன் சண்டை போட்டு சில வருடங்களுக்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறி சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறார். சரத்குமாரின் 65வது பிறந்தநாளை 60ம் கல்யாணமாகக் கொண்டாட நினைக்கிறார் அவரது மனைவி ஜெயசுதா. அம்மா வற்புறுத்தலால் அதற்காக வீட்டிற்கு வருகிறார் விஜய். நிகழ்ச்சி முடிந்து செல்லும் போது அப்பா சரத்குமார் கேன்சரால் பாதிக்கப்பட்டு, இன்னும் சில மாதங்களே உயிரோடு இருப்பார் எனத் தெரிய வருகிறது. தனது கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பை விஜய்யிடம் ஒப்படைக்கிறார் சரத்குமார். அதனால், விஜய்யின் அண்ணன்களாக ஸ்ரீகாந்த், ஷாம் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அதோடு சரத்குமாரின் பிசினஸ் எதிரியான பிரகாஷ்ராஜுடன் சேர்ந்து கொள்கிறார்கள். கம்பெனியின் சேர்மனாக பதவியேற்ற விஜய் அடுத்து என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
கோடீஸ்வர வீட்டு மகன் என்றாலும் விஜய் மிகவும் எளிமையானவர் என ரசிகர்களுக்குப் பிடிக்கும் விதத்தில் அவரது கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர். வாழ்க்கையை தனது விருப்பத்தின்படி மட்டுமே வாழ வேண்டும் என்று நினைப்பவர் விஜய். ஒரு பக்கம் ராஷ்மிகா காதல், மறுபக்கம் குடும்பத்தில் நிலவும் குழப்பம், இன்னொரு பக்கம் பிரகாஷ்ராஜின் எதிர்ப்பு என அனைத்தும் கலந்த ஒரு கதாபாத்திரம். இதெல்லாம் விஜய்க்கு வழக்கமான எளிதான ஒன்றுதான். டிரைலரில் உள்ளது போல இறங்கி அடித்து ஆட்ட நாயகன் என நிரூபிக்கிறார்.
ராஷ்மிகாவுக்கு அதிக வேலையில்லை. ‘ரஞ்சிதமே..’ பாடலில் மட்டும் விஜய்க்குப் போட்டியாக நடனமாடி அசத்துகிறார். சில காதல் காட்சிகளை வைத்திருந்தால் சுவாரசியமாக இருந்திருக்கும். விஜய்யுடன் யோகி பாபு வரும் காட்சிகள் ஜாலியாக சிரிக்க வைக்கின்றன. சரத்குமார், ஜெயசுதா சென்டிமென்ட் மழையில் நனைய வைக்கிறார்கள். ஸ்ரீகாந்த், ஷாம் அப்பாவையே எதிர்க்கும் மகன்கள். பிரகாஷ்ராஜ் இதே போல பல முறை நடித்துள்ளார்.
தமன் இசையில் ‘ரஞ்சிதமே’ பாடல் மட்டுமே சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளது. மற்ற பாடல்கள் சுமார் ரகம்தான். விஜய்யின் வீடாக பிரம்மாண்ட அரங்கை அமைத்திருக்கிறார்கள். விஎப்எக்ஸ் காட்சிகளை இவ்வளவு சுமாராக அமைத்திருக்க வேண்டாம்.
அழுத்தமான, உணர்வு ரீதியான காட்சிகள் என படத்தில் இல்லை. அதுதான் படத்திற்கு மைனஸ். இருப்பினும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான ஒரு படமாக அமைந்திருக்கிறது.
Tags: varisu, vijay, vamsi paidipalli, thaman, rashmika mandana, sarathkumar, prakashraj, prabhu