வி 3 - விமர்சனம்

07 Jan 2023

அமுதவாணன் இயக்கத்தில், வரலட்சுமி சரத்குமார், பாவனா, எஸ்தர் அனில், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆடுகளம் நரேன். அவருக்கு பாவனா, எஸ்தர் அனில் என இரண்டு மகள்கள். பாவனா ஒரு நாள் வெளியூருக்குச் சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பும் போது ஐந்து பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார். மகள் வராத நிலையில் காவல் துறையில் புகார் அளிக்கிறார் ஆடுகளம் நரேன். அவரது மகள் பாவனா எரித்துக் கொல்லப்பட்டது தெரிய வருகிறது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கைது செய்யும் காவல் துறை, அவர்களை என்கவுண்டரில் சுட்டுத் தள்ளுகிறது. ஆனால், தங்களது மகன்கள் அப்பாவிகள் என அவர்களது பெற்றோர் போராடுகிறார்கள். மனித உரிமை கமிஷன் விசாரணையில் இறங்குகிறது. அதற்கு வரலட்சுமி சரத்குமார் அதிகாரியாக இருக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

போலி என்கவுண்டர்கள் இந்தியாவில் இதற்கு முன்பு சில மாநிலங்களில் நடைபெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் ஒன்றை இந்தப் படத்தின் கதைக்களமாக வைத்து பரபரப்பான ஒரு படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அமுதவாணன்.

மனித உரிமை கமிஷன் விசாரணை அதிகாரியாக வரலட்சுமி சரத்குமார் நல்ல தேர்வு, பொருத்தமாக நடித்திருக்கிறார். சாதாரண குடும்பத்து அப்பாவைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஆடுகளம் நரேன். அவரது மகள்களாக பாவனா, எஸ்தர் அனில் இயல்பாக நடித்திருக்கிறார்கள். காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் பொன்முடியும் அவரது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை இப்போது அடிக்கடி நடக்கிறது. அவற்றிற்குத் தீர்வு சொல்லும் விதமாக ஒரு கருத்தை கிளைமாக்சில் சொல்கிறார் இயக்குனர், அது விவாதத்துக்குரிய ஒன்று. சில லாஜிக் குறைகளும் படத்தில் உள்ளது. அவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் ரசிக்கும்படியான படம்தான் இந்த ‘வி 3’.

Tags: Vindhya Victim Verdict, V3, Varalaxmi Sarathkumar, Amudhavanan

Share via: