கின்ஸ்லின் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம்.

நமது வாழ்க்கையில் பயணங்கள் ஒரு விதமான சுகானுபவம். விமானம், ரயில், பேருந்து, கார், ஆட்டோ, பைக், சைக்கிள் என ஒவ்வொன்றும் ஒரு விதமான அனுபவத்தைக் கொடுக்கும். அந்தப் பயணங்களிலேயே தங்களது வாழ்க்கையை வைத்திருப்பவர்களுக்கு தினமும் புதுப்புது அனுபவம்தான். அப்படி ஒரு அனுபவத்தைச் சந்திக்கும் ஒரு பெண் கார் டிரைவரின் கதைதான் இந்த ‘டிரைவர் ஜமுனா’.

அப்பா செய்த டிரைலவர் வேலையை அவரது மறைவுக்குப் பிறகு, கால் டாக்சி ஓட்டுபவராக இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவரது காரில் கூலிப்படையினர் சிலர் பயணம் செய்ய வேண்டிய சூழல் வருகிறது. அவர்களைப் பிடிக்க உதவி கமிஷனரும் களத்தில் இறங்கியிருக்க, அது பற்றி தெரிய வந்ததும் கூலிப்படையினர் ஐஸ்வர்யாவை மிரட்டி அவர்கள் சொல்வதை செய்ய வைக்கிறார்கள். இந்த சூழ்நிலையை ஐஸ்வர்யா எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் பரபரப்பான மீதிக் கதை.

கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பதில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனித் திறமை கொண்டவர். ‘கனா’ படத்திற்குப் பிறகு நம் மனதிற்கு நெருக்கமான ஒரு கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் தேர்வு செய்து நடித்திருக்கிறார். மொத்த படத்தையும் தனி ஒருவராக தனது கைகளில் தாங்கி சமாளித்திருக்கிறார் ஐஸ்வர்யா. 

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன், முன்னாள் எம்எல்ஏ--வாக நடித்திருக்கிறார். அவரது மகனாக மணிகண்டன் ராஜேஷ். இவர்கள் பற்றிய சஸ்பென்ஸ் கிளைமாக்சில் உடையும் போது அதிர்ச்சி ஏற்படுகிறது.

கூலிப்படையினராக ஐஸ்வர்யா காரில் ஏறும் அந்த மூவரையும் பார்த்தாலே பகீரென இருக்கிறது. 

ஜிப்ரானின் பின்னணி இசை பரபரப்பைக் கூட்டுகிறது. கோகுல் பெனாய் ஒளிப்பதிவு ஐஸ்வர்யா போல இன்னொரு டிரைவராக படத்தைக் கூட்டிச் செல்கிறது.

மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்கள் தமிழ் சினிமாவில் வருவது குறைவு. அதிலும் ஒரு பெண் கார் டிரைவர் கதாபாத்திரம்  ரொம்பவும் புதிது. வித்தியாசமாக யோசித்து விறுவிறுப்பான படத்தைக் கொடுத்த படக்குழுவினரைப் பாராட்டியே ஆக வேண்டும்.