ஓடிடி தளங்களில் கடந்த சில வருடங்களில் நிறைய மலையாளத் திரைப்படங்களைப் பார்த்த பிறகு அப்படி கதையம்சம் உள்ள இயல்பான, எளிதான திரைப்படங்கள் தமிழிலும் வராதா என்ற ஒரு ஏக்கம் வந்தது. அந்த ஏக்கத்தைத் தீர்த்து வைத்திருக்கிறது இந்த ‘உடன்பால்’.
அறிமுக இயக்குனர் கார்த்திக் சீனிவாசன் ஒரு எளிய குடும்பத்திற்குள் நடக்கும் ஒரு கதையை அதன் தன்மை மாறாமல் எந்த சினிமாத்தனமும் இல்லாமல் அப்படியே இயல்பாகக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.
சார்லிக்கு லிங்கா, காயத்ரி என ஒரு மகன் ஒரு மகள். மருமகள் அபர்ணதி, மருமகன் விவேக் பிரசன்னா. லிங்கா, காயத்ரி இருவருக்குமே பணத் தட்டுப்பாடு. அதனால், அவர்கள் இருக்கும் வீட்டை விற்க அப்பாவிடம் பேச அவர்களது அம்மாவுக்கு திதி படைக்க வேண்டும் என்று சொல்லி தங்கை காயத்ரியை வரவழைக்கிறார் லிங்கா. படைத்து முடித்த பின் அனைவரும் பேச சார்லி வீட்டை விற்பதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இந்நிலையில் சார்லி, வள்ளலால் காம்ப்ளக்ஸ் என்ற ஒரு இடத்திற்கு வழக்கம் போல செல்கிறார். அந்த காம்ப்ளக்ஸ் திடீரென இடிந்து விழுந்து அங்கிருந்த பலர் இறந்ததாக டிவியில் செய்தி சொல்கிறார்கள். லிங்கா, காயத்ரி அதிர்ச்சியடையகிறார்கள். கட்டிட விபத்தில் இறந்தவர்களுக்கு 20 லட்சம் அரசு உதவி என அறிவிப்பு வருகிறது. அந்தப் பணத்தை வைத்து தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளலாம் என லிங்கா, காயத்ரி முடிவு செய்ய, சார்லி உயிரோடு வந்து நிற்கிறார். ஆனால், வந்த சிறிது நேரத்தில் இறந்து போகிறார். இருந்தாலும் பணத்திற்கு ஆசைப்படும் லிங்கா, காயத்ரி சார்லியின் பிணத்தை எப்படியாவது அந்த வள்ளலார் காம்ப்ளக்சில் போட முடிவு செய்கிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு எளிமையான சிறிய வீட்டிற்குள்ளேயே முழு படமும் நகர்கிறது. ஆனால், அதில் தொய்வு எதுவும் இல்லாமல் சுவாரசியமான காட்சிகளுடன் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். ஒரு ஏழைக் குடும்பத்தில் பணத் தட்டுப்பாடு வருவதும், அதற்காக அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதும் கற்பனையாக இருந்தாலும் பணத்தட்டுப்பாடு ஒருவரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்பது அதிர்ச்சியாக உள்ளது.
சார்லியின் மூத்த மகனாக லிங்கா. குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் இந்த வருடம் வெளிவந்த ‘பரோல்’ படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார். இந்தப் படத்தில் தனி கதாநாயகனாக நடித்து தனி முத்திரை பதித்திருக்கிறார். 20 லட்ச ரூபாய்க்காக அப்பாவின் பிணத்தை வைத்து ஒரு நாடகத்தை நடத்துகிறார். அப்படிப்பட்ட குணம் கொண்டவருக்காக கடைசியில் அவரது மகனை வைத்தே ஒரு ‘நச்சென்ற’ கிளைமாக்சை வைத்திருக்கிறார் இயக்குனர்.
லிங்காவின் தங்கையாக காயத்ரி. அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு பணம் என்று வந்ததும் அப்படியே மாறிப் போகும் ஒரு கதாபாத்திரம். காயத்ரியின் கணவராக விவேக் பிரசன்னா. இவர் அடிக்கும் ஒன் லைன் பன்ச் வசனங்கள் அனைத்துமே கலகலப்பூட்டுகின்றன. லிங்காவின் மனைவியாக அபர்ணதி. எப்போதும் டீ போட்டுக் கொண்டே இருந்தாலும் அவ்வப்போது எட்டிப் பார்த்து ஒரு வசனத்தை பேசிவிட்டுச் செல்கிறார்.
சார்லியின் நடிப்பில் அவரது அனுபவம் பேசுகிறது. அவரது ஞாபக மறதி அக்காவாக நக்கலைட்ஸ் தனம், லிங்காவின் தம்பியாக சார்லியின் பேரனாக மாஸ்டர் தர்ஷித் சந்தோஷ், பேத்தியாக மான்யாஸ்ரீ ஆகியோரும் இயல்பாய் நடித்திருக்கிறார்கள். கிளைமாக்சில் தர்ஷித் பார்க்கும் அந்தப் பார்வை இன்னும் அப்படியே கண்ணுக்குள் நிற்கிறது.
ஒரு வீட்டுக்குள் எப்படியெல்லாம் கேமரா கோணங்களை வைக்க முடியுமோ அப்படி வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர். சக்தி பாலாஜியின் பின்னணி இசை காட்சிகளுக்குண்டான பரபரப்பைக் கூட்டுகிறது. தேவையான காட்சிகளை மட்டும் சரியாகக் கோர்த்திருக்கிறார் எடிட்டர் மதன்.
இடைவேளை வரை முழு சுவாரசியத்துடன் நகர்கிறது படம். இடைவேளைக்குப் பின் சார்லியின் பிணத்தை காம்ப்ளக்சுக்குள் கொண்டு போய் போட அவர்கள் திட்டமிடும் காட்சிகள் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றது. அதையும் இடைவேளைக்கு முந்தைய காட்சிகளைப் போலக் கொடுத்திருக்கலாம்.
ஆஹா ஓடிடி தளத்தில் இப்படம் டிசம்பர் 30ம் தேதி வெளியாகிறது.