இந்திய விண்வெளித் துறையில் சிறந்த சாதனைகளைப் படைத்தும்,  சர்ச்சையில் சிக்கி சட்டப் போராட்டம் நடத்தி சில ஆண்டுகளுக்குப் பிறகே குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட விஞ்ஞானி நம்பி நாராயணன் பற்றிய பயோபிக் திரைப்படம்தான் இந்த ‘ராக்கெட்ரி, நம்பி விளைவு’.

மாதவன் இந்தப் படத்தைத் தயாரித்து, இயக்கி, நம்பி நாராயணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அந்தக் கதாபாத்திரத்தில் மாதவனின் நடிப்பு அந்த அளவிற்குப் பொருத்தமாகவும், சிறப்பாகவும் அமைந்துள்ளது. இளம் வயது, நடுத்தர வயது, முதுமை வயது என ஒவ்வொரு கால கட்டங்களிலும் அதற்கேற்ற உடல் மொழி, பேச்சு என ஒட்டுமொத்த கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்துள்ளார்.

தனக்குக் கிடைத்த அமெரிக்க விண்வெளித் துறையான நாசா வேலைக்குக் கூடச் செல்லாமல் தாய்நாட்டிற்காக நம்பி நாராயணன் உழைத்து புதிய சாதனைகளைப் படைத்தும் அவரை தேச விரோதி என குற்றம் சாட்டி காவல் துறை அவரைக் கைது செய்து கொடுமைப்படுத்துவது அதிர்ச்சியாக உள்ளது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் அவரது குடும்பம் தவிக்கிறது. அந்தக் காட்சிகளில் மாதவனின் நடிப்பு நெகிழ வைக்கிறது.

இளம் வயது விஞ்ஞானியாக திரவ எரிபொருள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விகாஸ் என்ற இஞ்சினை உருவாக்கி இந்திய விண்வெளித் துறை வரலாற்றில் புதிய முன்னேற்றத்தை உருவாக்குகிறார். அது மட்டுமல்ல பிரான்ஸ் நாட்டிற்கு ஒரு குழுவினருடன் சென்று அந்நாட்டின் தொழில்நுட்பத்தையும் அறிந்து வந்து இந்திய விண்வெளித் துறையில் பயன்படுத்துகிறார். சோவியத் ரஷ்யாவிற்கே சென்று நம் நாட்டிற்காக அமெரிக்க எதிர்ப்புகளை மீறி கிரையோஜெனிக் இஞ்சின்களை வாங்கி வருகிறார். இப்படி பல சாதனைகள் அவரால் இந்திய விண்வெளித் துறையில் படைக்கப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட ஒரு விஞ்ஞானியை ஒரு மாநிலத்தின் காவல் துறை தேச விரோதி எனச் சொல்லி கைது செய்து கொடுமைப்படுத்துவது எதற்காக என்ற கேள்விக்கு மட்டும் படத்தில் விடையில்லை. அதையும் சொல்லியிருந்தால்  படத்தின் மீதும், நம்பி நாராயணன் மீதும் இன்னும் அதிகமான பெருமை கிடைத்திருக்கும். பரவாயில்லை, இரண்டாம் பாகம் எடுத்து அதிலாவது மாதவன் சொல்வார் என எதிர்பார்ப்போம்.

படம் முழுவதும் மாதவனைச் சுற்றி மட்டுமே நகர்ந்தாலும் அவரது மனைவி சிம்ரன் கதாபாத்திரம், மற்ற சக விஞ்ஞானிகள் என சிலருக்கும் படத்தில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். விக்ரம் சாரா பாய், அப்துல் கலாம் கதாபாத்திரங்கள் சில நிமிடங்கள் மட்டுமே படத்தில் வந்து போகின்றன.

சாம் சிஎஸ் பின்னணி இசை, ஸ்ரீஷா ராய் ஒளிப்பதிவு, பிஜித் பாலா படத்தொகுப்பு, அனுஜ் தேஜ்பாண்டே விஎப்எக்ஸ் ஆகியவை படத்திற்கு பக்கபலமாய் அமைந்துள்ளது.

ஒரு விண்வெளி விஞ்ஞானியின் வியத்தகு சாதனையை விவரமாய் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.