இயக்குனர் ஹரி அவருடைய வழக்கமான பாணியில் மீண்டும் ஒரு பரபரப்பான படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். தனது மைத்துனர் அருண் விஜய்யுடன் முதல் முறை கூட்டணி சேர்ந்திருக்கிறார். முதல் கூட்டணியே கமர்ஷியல் ரீதியாக ஒரு வெற்றிப் படத்தையும் கொடுத்திருக்கிறது.

தனது குடும்பத்தினரை பரம எதிரி குடும்பத்திடமிருந்து காப்பாற்ற அரணாக இருக்கிறார் அருண் விஜய். ஆனால், ஒரு கட்டத்தில் அவரது அண்ணன்களே அவரை சரியாகப் புரிந்து கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்கள். வீட்டை விட்டு வெளியில் வந்தாலும் தனது குடும்பத்தினரைக் காப்பாற்றும் முயற்சியில் இருந்து சிறிதும் விலகாமல் இருக்கிறார் அருண் விஜய். இருப்பினும் அவரது குடும்பத்தினரை வில்லன் பழி வாங்கத் துடிக்கிறார். அதிலிருந்து தனது குடும்பத்தினரை அருண் விஜய் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

மொத்த படத்தையும் தனி ஒருவனாய் யானை பலத்துடன் சுமந்திருக்கிறார் அருண் விஜய். அவரது பரபரப்பான ஆக்ஷன் நடிப்பு படத்திற்கு மிகவும் பக்கபலமாய் அமைந்துள்ளது. ஹரி படங்களில் நடித்தவர்களில் விக்ரம், சூர்யா இருவருமே அந்த அதிரடி ஹீரோ கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருப்பார்கள். அவர்களது வரிசையில் அருண் விஜய்யும் இடம் பிடித்துவிட்டார்.

அருண் விஜய்யின் காதலியாக பிரியா பவானி சங்கர். தனது படங்களில் கதாநாயகிகளுக்கும் நல்ல முக்கியத்துவம் கொடுப்பவர் ஹரி. ஜெபமலர் கதாபாத்திரத்தில் பிரியா அவ்வளவு பொருத்தமாய் நடித்திருக்கிறார். அருண் விஜய்யிடம் நடந்தது என்ன என்பது குறித்து அவர் பேசும் அந்த ஒரு காட்சியே அதற்கு சிறந்த உதாரணம்.

அருண் விஜய்யின் அண்ணன்களாக சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், சஞ்சீவி, அம்மாவாக ராதிகா, அப்பாவாக ராஜேஷ், அண்ணன் மகளாக அம்மு அபிராமி என அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள். 

அருண் விஜய்யுடன் படம் முழுவதும் இருக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு. சில காட்சிகளில் நச்சென்று நகைச்சுவையுடன் நடித்திருக்கிறார். சில காட்சிகளை நறுக்கி எறிந்தாலும் பரவாயில்லை என்றும் நடித்திருக்கிறார். வில்லன் ராமச்சந்திர ராஜு, கிடைத்த வாய்ப்பில் வில்லத்தனம் செய்திருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் இசையில் பின்னணி இசை படத்தின் ஆக்ஷனுக்கேற்றபடி பரபரபவென அமைந்திருக்கிறது. பாடல்களில் ‘சண்டாளியே’ பாடல் ரசிக்க வைக்கிறது. ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை கோபிநாத்தின் காமரா சுழன்று சுழன்று படமாக்கியிருக்கிறது. சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் அதிரடியாய் அமைந்துள்ளது.

சென்டிமென்ட், குடும்பப் பாசம், காதல், என குடும்பத்தினருடன் ரசிக்கும்படியான ஒரு படம். ஆக்ஷன் பட ரசிகர்களுக்கு இந்த ‘யானை’ பிரம்மாண்டம்.