டி பிளாக் – விமர்சனம்
02 Jul 2022
கல்லூரிக் கதை என்றாலே காதல் கதையாகத்தான் தமிழ் சினிமாவில் பெரும்பாலும் சொல்லப்பட்டிருக்கும். ஆனால், இந்தப் படத்தில் ஒரு த்ரில்லர் கதையைக் கொடுத்திருக்கிறார்கள்.
கோவைக்கு அருகே, காட்டுப் பகுதியில் கட்டப்பட்டுள்ள ஒரு இஞ்சினியரிங் கல்லூரியில் சேர்கிறார் அருள் நிதி. காட்டுப்பகுதி என்பதால் ஹாஸ்டலில் தங்குபவர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கிறது நிர்வாகம். மாலை ஆறு மணிக்கு மேல் யாரும் வெளியே வரக்கூடாது. ஒன்பது மணிக்கு மேல் விளக்குகள் எரியக் கூடாது என பல கட்டுப்பாடுகள். இந்நிலையில் அருள்நிதியின் வகுப்புத் தோழி ஒருவர் சிறுத்தை அடித்துக் கொல்லப்படுகிறார். அது என்ன என்பது பற்றி விசாரிக்க ஒரு சீனியர் அருள்நிதியைத் தேடி வருகிறார். தொடர்ந்து அந்த சீனியரும் கொல்லப்படுகிறார். இதைப் பற்றி முழுவதும் விசாரிக்க களத்தில் இறங்குகிறார் அருள்நிதி. கொலைகளுக்கான காரணங்களை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
அருள்நிதி தான் நடிக்கும் படங்களில் தன்னுடைய உழைப்பை முழுவதுமாகக் கொடுப்பவர். படத்தில் மற்றவர்களைக் காட்டிலும் கதாபாத்திரத்தில் ஈடுபடுத்திக் கொண்டு நடித்திருக்கிறார். ஹீரோயிசம் இல்லாத யதார்த்தமான கதாபாத்திரமாக இருந்தாலும் அருள்நிதியின் நடிப்பு பேச வைக்கிறது.
படத்தின் நாயகி அவந்திகாவுக்கு அதிக வேலையில்லை. அருள்நிதியின் நண்பர்களாக, படத்தின் இயக்குனர் விஜயகுமார், கதிர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கத்திப் பேசுவது மட்டுமே நகைச்சுவை என கதிர் நினைத்திருக்கிறார் போலிருக்கிறது. அவரது கூச்சல் எரிச்சலைத்தான் தருகிறது. படத்தின் வில்லன் சரண்தீப் மிரள வைத்திருக்கிறார்.
படம் முழுவதும் கல்லூரி, ஹாஸ்டல், வகுப்பறை, கேண்டீன் ஆகியவற்றை மட்டுமே சுற்றி வருகிறது. இரவு நேரக் காட்சிகளில் பயம் வரும் அளவிற்கு பயமுறுத்துகிறார் ஒளிப்பதிவாளர். ரோன் எத்தன் யோஹனின் பின்னணி இசையும் அப்படியே.
இடைவேளை வரை கலகலப்பாக நகரும் படம் இடைவேளைக்குப் பின் பரபரப்பாக நகர்கிறது. திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
Tags: d block, vijayakumar rajendiran, arulnithi, avanthika