ஆன்யாஸ் டுடோரியல் - விமர்சனம்
03 Jul 2022
ஆஹா ஓடிடி தளத்தில் வந்துள்ள இணையத் தொடர் ஆன்யாஸ் டுடோரியல். பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில், அரோல் கொரேலி இசையமைப்பில், ரெஜினா கசான்ட்ரா, நிவேதிதா சதீஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
அக்கா, தங்கையான மது (ரெஜினா), லாவண்யா (நிவேதிதா) ஆகிய இருவரைச் சுற்றி நடக்கும் கதை. சிறு வயதிலிருந்தே இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டே வளர்ந்தவர்கள். சிறு வயதிலேயே தங்களது வீட்டில் பேய் இருக்கிறது என அடிக்கடி பயப்படுபவர் தங்கை லாவண்யா. அதற்காக அக்கா மது அடிக்கடி தங்கை லாவண்யாவை அடித்து, சண்டை போடுவார். இதெல்லாம் பிளாஷ்பேக்கில் அடிக்கடி சொல்லப்படுபவை.
லாவண்யா அக்கா, அம்மாவை விட்டு வெளியேறி தனியாக ஒரு பிளாட்டில் குடியேறுகிறார். கோவிட் லாக் டவுன் காலத்தில் தனது இன்ஸ்டாகிராம் மூலம் தன் வீட்டில் பேய் இருப்பது போல பொய்யான லைக் வீடியோ நிகழ்ச்சி நடத்தி பிரபலமாகிறார். அதன் மூலம் பணமும் சம்பாதிக்கிறார். வீடியோவில் தனது வாழ்க்கையில் அக்கா மதுவால் கொடுமைப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகிறார் லாவண்யா. அவரது வீடியோவால் பல பிரச்சினைகள் உருவாகிறது. லாவண்யா இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க காவல் துறையும் முயற்சிக்கிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.
இத் தொடருக்காக நிவேதிதா சதீஷ் வசிப்பதற்காக போடப்பட்ட வீட்டு செட்டே பயமுறுத்துவது போல உள்ளது. அதற்கான லைட்டிங்குகள், பொருட்கள் அனைத்துமே விதவிதமாக அமைக்கப்பட்டுள்ளது. நிவேதிதாவின் மேக்கப், வீடியோ என அழகான பெண்ணின் பின்னால் எவ்வளவு பிரச்சினைகள் உள்ளது என்பது அதிர்ச்சியடைய வைக்கிறது. சமூக வலைத்தளங்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இது சிறந்த உதாரணம். சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த நிவேதிதா தன்னால் முதன்மைக் கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடிக்க முடியும் என நிரூபித்திருக்கிறார்.
அக்கா மது கதாபாத்திரத்தில் ரெஜினாவும் இயல்பாய் நடித்திருக்கிறார். அடிக்கடி ஆங்கில கெட்ட வார்த்தை பேசுவதுதான் நெருடலாக உள்ளது. ஒரு கோபக்கார அக்கா எப்படி இருப்பார் என்பதை கண்முன் கொண்டு வந்துள்ளார் ரெஜினா.
அரோல் கொரேலி பின்னணி இசை, விஜய் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு ஹாலிவுட் தொடரைப் பார்க்கும் அனுபவத்தைத் தருகிறது.
மேக்கிங், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நடிப்பு என அனைத்துமே தரமாக உள்ளது. ஆனால், திரைக்கதை நகர்வது, லாவண்யா ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார் என்பது புரிந்து கொள்ள முடியாத குழப்பத்தையே தருகிறது.
பரபரப்பான த்ரில்லர் தொடர் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இது ஒரு தரமான தொடர்.
Tags: anyas tutorial, Regina, Nivedhithaa, Pallavi Gangi Reddy