அறிமுக இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புச்சாமி எழுதி இயக்கி இருக்கும் படம் ‘ஃபாரின் சரக்கு’.
அறிமுக நடிகர்கள் கோபிநாத், சுந்தர், உசேன், சுரேந்தர் சுந்தரபாண்டியன், அஃப்ரினா, ஹரினி, இலக்கியா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை நெப்டியூன் செய்லர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் கோபிநாத் தயாரித்துள்ளார்.
குஜராத் அமைச்சர் ஒருவரின் மகன் ரகசியமாக தமிழகத்துக்கு வருகிறார். தமிழக அமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டின் மூலம் அவரை 10 நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு உசேன் தலைமையிலான ரவுடி கும்பலிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதே சமயம், குஜராத் அமைச்சரின் மகனை கண்டுபிடிப்பதில் சில குழுக்கள் ஈடுபடுகிறார்கள். இறுதியில் அவரை கண்டுபிடித்தார்களா ? இல்லையா?, அவர்கள் யார் ? குஜராத் அமைச்சரின் மகன் எதற்காக தமிழகத்தில் ரகசியமாக தங்க வைக்கப்படுகிறார் ? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு வித்தியாசமான படத்தைக் கொடுக்க இயக்குனர் முயற்சித்திருக்கிறார். ஒரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லர் கதை. அதில் முடிந்த அளவிற்கு நடிகர், நடிகைகள், இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட படக்குழுவினர் தங்கள் உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
படத்தின் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கோபிநாத், சுந்தர் ஆகியோருக்கு முதல் படம் என்றாலும் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.
மகாலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் உசேன், மற்றும் சுரேந்தர் சுந்தரபாண்டியயன் மற்ற நடிகர்களைக் காட்டிலும் கவனம் ஈர்க்கிறார்கள்.
அஃப்ரினா, ஹரினி, இலக்கியா ஆகியோர் கதாநாயகிகளாக அல்லாமல் கதையின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.
பிரவீன் ராஜ் இசை, ஒளிப்பதிவாளர் சிவநாத் ராஜன், எடிட்டிர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளனர்.
வித்தியாசமான கதைக்கேற்ப சில டிவிஸ்ட்டுகளை திரைக்கதையில் சேர்த்து நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். கிளைமாக்ஸ் இப்படிப் போகும் என நம்மால் சிறிதும் எதிர்பார்க்க முடியவில்லை.
’ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்பை வைத்துவிட்டு படத்தில் ஒரு இடத்தில் கூட மது அருந்துவது அல்லது புகை பிடிப்பது போன்ற காட்சிகளை வைக்காமல் இருப்பது ஆச்சரியம்.
முழுக்க முழுக்க புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த படத்தில் பட்ஜெட் காரணமாக சிறு சிறு குறைகள் இருந்தாலும், அந்த குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் படக்குழு நம்பிக்கை தரும் விதத்தில்தான் படத்தைக் கொடுத்திருக்கிறது.