தமிழ் சினிமாவில் வந்துள்ள மற்றுமொரு பேய்ப் படம். ஒரு அற்புதமான இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருக்கும் ஒரு வீட்டில் இருக்கும் ‘பாட்டி’ பேய், ஆங்கிலத்தில் ‘கிராண்மா’ பேய் என்ன செய்கிறது என்பதுதான் படத்தின் கதை.
ஒரே இடத்தில் கதையை நகர்த்தினாலும் ஆங்காங்கே நம்மை பயமுறுத்தியிருக்கிறார் இயக்குனர். மலைகளுக்கு நடுவில் தனியாக இருக்கும் வீட்டில் வக்கீல் விமலா ராமன் தனது ஒரே மகளுடன் வசித்து வருகிறார். அவரது மகளுக்காக வீட்டிலேயே பாடங்களைச் சொல்லிக் கொடுக்க சோனியா அகர்வால் ஆசிரியையாக சேருகிறார். இதற்கு முன் வந்த ஆசிரியைகள் சிலர் அந்த வீட்டை விட்டு ஓடியுள்ளனர். விமலாவின் மகள் முதலில் சோனியாவுடன் பழக மறுக்கிறார். மேலும், வீட்டில் தன்னுடைய பாட்டி பேயாக இருக்கிறார் என்று சொல்லி பயமுறுத்துகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் அந்த பாட்டி போய் சோனியா முன் வருகிறது. வந்து தனக்காக ஒரு வேண்டுகோளையும் வைத்து அதை சோனியா நிறைவேற்றித் தர வேண்டும் எனக் கேட்கிறது. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தில் மொத்தமாக சில நடிகர்கள், நடிகைகள் மட்டுமே. அந்த வீட்டை விட்டு படத்தை வேறு எங்கும் எடுக்கவில்லை. அந்த வீட்டையே சுற்றிச் சுற்றி பல கோணங்களில் எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் யஸ்வந்த் பாலாஜி. அவருக்குத்தான் இந்தப் படத்தில் வேலை அதிகம்.
வக்கீலாக விமலா ராமன், அவரது மகளாக தயாரிப்பாளரின் மகள் பௌர்ணமிராஜ், ஆசிரியையாக சோனியா அகர்வால் கொடுத்த கதாபாத்திரங்களில் நிறைவாகச் செய்திருக்கிறார்கள். கிராண்மா பேயாக ஷர்மிளா. வில்லனாக ஹேமந்த் மேனன் சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் கொஞ்சம் மிரட்டுகிறார். மலையாளத்தில் எட்டு படங்களில் ஹீரோவாக நடித்தவராம் இவர்.
அந்த இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் தன்னந்தனியாக பகலில் இருப்பதற்கே ஒரு தைரியம் வேண்டும். அதிலும் அம்மா, மகள் மட்டுமே அங்கு இருக்கிறார்கள், பாதுகாப்பிற்கு ஒரு செக்யூரிட்டி கூட இல்லை என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். அக்கம் பக்கத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு வீடு கூட இல்லை. அப்படிப்பட்ட இடத்தில் இரண்டு பெண்கள் வசிக்கிறார்கள் என்பது நம்பும்படியாக இல்லை.
இருந்தாலும் முக்கியமான நான்கு கதாபாத்திரங்களில் பெண்களை மையப்படுத்திய இந்தப் படத்தை எடுப்பதற்கு இயக்குனர் ஷிஜின்லாலுக்கு ஒரு தைரியம் வேண்டும். அதற்காக அவரைப் பாராட்டலாம்.