‘மெடிக்கல் கிரைம்’ என்று சொல்லப்படும் மருத்துவத் துறையில் நடைபெறும் குற்றங்கள் பற்றி அவ்வப்போது சில படங்கள் வரும். முன்னணி ஹீரோக்கள் நடித்து சில படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றிருக்கின்றன.
ஆனால், இந்த ‘வாட்ச்’ படத்தில் புதிய கலைஞர்கள் இணைந்து குறிப்பிடத்தக்க ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் செலவு செய்து, மேக்கிங்கில் பிரம்மாண்டத்தைக் காட்டியிருந்தால் பலரையும் ஈர்த்த ஒரு படமாக அமைந்திருக்கும். இயக்குனர் விஜய் அசோகன் ஒரு வித்தியாசமான படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார். திரைக்கதை அமைப்பு ரசிக்கும்படி உள்ளது.
படத்தின் நாயகன் கிரிஷ், ஒரு கார்ட்டூனிஸ்ட். ஒரு நாள் காரில் செல்லும் போது அவர் ‘லிப்ட்’ கொடுத்த ஒரு பத்திரிகையாளர் மூலம் ஒரு மிகப் பெரும் மருத்துவ ஊழல் பற்றி தெரிய வருகிறது. ஒரு முன்னாள் ராணுவ வீரரின் மகன் என்பதால் தன் நாட்டு மக்களைக் காப்பாற்றும் எண்ணத்தில், அவரே களத்தில் இறங்குகிறார், வில்லன்களிடமும் மாட்டிக் கொண்டு தாக்கப்படுகிறார். அதில் தலையில் அடிபட்டு மூன்று ஆண்டுகள் சுய நினைவு இல்லாமல் இருக்கிறார். நினைவு திரும்பிய பின் முன்னர் அவர் பார்த்த முகங்கள், வேறு முகங்களாகத் தெரிகிறது. அந்த சிக்கலில் இருந்து மீண்டாரா, மருத்துவ ஊழல் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் நாயகன் கிரிஷ், பார்ப்பதற்கு தெலுங்கு நடிகர் பிரபாஸ் தம்பி போல இருக்கிறார். தொடர்ந்து நாயகனாக நடிப்பதற்குரிய அழகும், துடிப்பும் அவரிடம் இருக்கிறது. முயற்சி செய்தால் தமிழ் சினிமாவில் மற்றொரு கதாநாயகனாக முன்னேறலாம்.
படம் முழுவதும் ஹீரோவைச் சுற்றியே அதிகம் நகர்கிறது. நாயகி சப்ரினா ஆலம் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். வில்லன்களாக மேத்யூ வர்கீஸ், உதயகுமார்.
படத்திற்கு நான்கு ஒளிப்பதிவாளர்கள் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். அதிகமாக டிரோன் காட்சிகளைப் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். சுகன்யன் சுந்தரேஸ்வரன் பின்னணி இசை சில இடங்களில் பொருத்தமாகவும், சில இடங்களில் இரைச்சலாகவும் இருக்கிறது.
படக்குழுவின் முதல் முயற்சி, சில பல இடங்களில் குறை இருந்தாலும் நிறைவாகவே அடியெடுத்து வைத்திருக்கிறார்கள்.