சினிமா, வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத்தான் அது ஒரு கனவு உலகம். ஆனால், அந்த உலகத்திற்குள் ஆயிரக்கணக்கான கனவுகளுடன் நிறைய பேர் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அனைவருக்கும் ஒரே நாளில் எந்த அதிசயமும் நடந்துவிடாது. பல ஆண்டுகள் காத்திருந்தாலும் எதுவுமே நடக்காத துயரங்களும் உண்டு. அதிலும், உதவி இயக்குனர்களாக இருப்பவர்கள் நிலைமையைப் பற்றி சொல்ல வார்த்தைகளே வராது. அப்படிப்பட்டவர்களின் துயரத்தை, ஒரு பேய்க் கதையின் வழியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் தியான் பிரபு. அவரே கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.

உதவி இயக்குனராக இருக்கும் தியான் பிரபு, புதிய படம் ஒன்றை இயக்க வாய்ப்பு தேடி கம்பெனி, கம்பெனியாக அலைகிறார். ஒரு பெரிய கம்பெனியில் கதையைச் சொல்கிறார். அவருடைய கதையைக் கேட்ட கம்பெனி, அவருக்கும் படத்தை இயக்கும் வாய்ப்புத் தராமல் கதையை மட்டும் தரச் சொல்கிறது. அவர் மறுப்பு தெரிவித்தும் படமாகிறது. அதை எதிர்த்து நீதிமன்றம் செல்கிறார். அதனால் கோபமடைந்த தயாரிப்பு நிறுவனம் அவரைக் கடத்திக் கொலையும் செய்கிறது. அதன்பின் அவர் பேயாக வந்து என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சென்னை, கோடம்பாக்கத்தில் உதவி இயக்குனர்களாக சுற்றிக் கொண்டிருப்பவர்கள் யார், யார் என்பது சினிமாவில் இருப்பவர்கள் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள். பல நாள் பட்டினி இருந்த தோற்றம், ஒரு விரக்தி, கண்களில் ஆயிரம் கனவுகள், அற்புதமான பேச்சு என அவர்களை அடையாளம் காண முடியும். அப்படிப்பட்ட ஒருவராக படத்தில் தன்னை அக்கதாபாத்திரத்திற்குள் யதார்த்தமாய் காட்டிக் கொள்கிறார் தியான் பிரபு. தன் கதை பறி போவது குறித்து அவர் கதறும் கதறல் தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு சில முக்கிய படங்களுக்கும் நடந்துள்ளது. 

கதைக்குள் கதை என, தியான் பிரபு ஒரு தயாரிப்பாளரிடம் சொல்லும் பேய்க் கதையும் படத்தில் ஒரு பகுதியாக வருகிறது. அக்காட்சிகள் நிறையவே மிரள வைக்கிறது. காரணம் அதற்கான லொகேஷன். மலைப்பிரதேசத்தில் தனிமையான பழைய காலத்து பங்களா. நண்பர்கள் ‘காக்கா முட்டை விக்கி, ரமேஷ், அஷ்மிதா, நிலோபர் என தனது நண்பர்களுடன் அந்த பங்களாவிற்குச் சென்று தங்குகிறார் தியான் பிரபு. அங்கு இருக்கும் பேய் ஒன்று இவர்களை மிரட்டுகிறது. நண்பர்களில் சிலர் காணாமல் போகிறார்கள் என நிறையவே பயமுறுத்துகிறார்கள். ஒரே படத்தில் கதைக்குள் கதை என்பது சுவாரசியமாகவே உள்ளது.

வில்லன்களில் ஒருவராக பின்னணிப் பாடகர் வேல் முருகன் மற்றும், சதுரங்க வேட்டை வளவன் கிடைத்த கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். பேயிடம் கதை கேட்டு மிரண்டு போகும் தயாரிப்பாளராக மனோபாலா.

ஒரு பேய்ப்படத்தில் என்னவெல்லாம் ஒளிப்பதிவு இருக்குமோ அதையும் மீறி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் வேல்முருகன். அந்த காட்டு பங்களாவில் இரவு நேரக் காட்சிகளில் லைட்டிங்கே மிரட்டலாக உள்ளது.

பேய்க் கதை என்றாலும் வெளிநாட்டில் இருந்து சேவை செய்ய வந்த ஒரு கன்னியாஸ்திரியை மத வெறி கும்பல் ஒன்று கொலை செய்கிறது என நாட்டில் நடந்த ஒரு பழைய விஷயத்தையும் ஞாபகப்படுத்துகிறது படம். கார்ப்பரேட் கம்பெனிகள் படமெடுக்க வந்து என்ன செய்கிறார்கள் என்பதையும் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள். 

கதைத் திருட்டு செய்யும் சில இயக்குனர்களைப் பற்றி வெட்டவெளிச்சமாக சொல்லும் படம்தான் இந்த ‘படைப்பாளன்’