இயக்குனர், நடிகர் தயாரிப்பாளர் தனது முதல் படத்திலிருந்தே வித்தியாசமான முயற்சிகளை செய்து வருபவர். தனது முந்தைய படமான ‘ஒத்த செருப்பு’ படத்தில் தான் மட்டுமே நடித்து வியக்க வைத்தவர்.

அடுத்த படத்தை உலக சாதனை படமாகக் கொடுக்க வேண்டும் என ‘சிங்கிள் ஷாட்’ படமாக எடுத்து வெளியிட்டிருக்கிறார். இப்படி ஒரு முயற்சி தமிழ் சினிமாவில் இருந்து வந்ததற்கு தமிழ்த் திரையுலகம் மட்டுமல்ல இந்தியத் திரையுலகமே பெருமைப்பட வேண்டும்.

94 நிமிடங்கள் ஓடும் படம் கேமரா ஆன் செய்யப்பட்ட முதல் வினாடியிலிருந்து 94வது நிமிடத்தில் படம் முடியும் போது மட்டுமே ஆப் செய்யப்படும். அதற்குள் நடக்கும் கதை இது. அதற்காக 72 விதமான அரங்குகள் ஒரே இடத்தில் அடுத்தடுத்து அமைக்கப்ட்டு அதில் நடிகர்கள், நடிகைகள் நடித்துள்ள படம் இது.

வாழ்க்கையில் சிறு வயதில் இருந்து கஷ்டப்பட்டு வளர்ந்து பெரிய பைனான்சியராக இருக்கும் பார்த்திபனுக்கு கொலை மிரட்டல் வருகிறது. அதை எதிர் கொண்டு சமாளிக்கப் புறப்படும் பார்த்திபன் தனது கடந்த கால வாழ்க்கையை சிறு வயதிலிருந்து நினைத்துப் பார்க்கிறார். பார்த்திபனின் சிறு வயது, டீன் ஏஜ் பருவம், இளமைப் பருவம், திருமண வாழ்க்கை என பிளாஷ்பேக்கில் ஒவ்வொன்றாக வருகிறது. இதுதான் படத்தின் கதை. 

படத்தில் பார்த்திபன் மட்டும் சிறப்பாக நடிக்காமல் தன்னுடன் நடிப்பவர்களுக்கும் குறிப்பிடத்தக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அவர்கள் மட்டுமல்ல படத்தில் ஒரு வினாடி வந்து போகிறவர்கள் கூட சரியான டைமிங்கில் நடிக்க வேண்டிய ஒரு படம். அதனால், அனைவருக்குமே பெரிய பாராட்டுக்களை அளித்தே ஆக வேண்டும். 

பார்த்திபனின் ஜோடிகளாக நடித்திருக்கும், சினேகா குமார், பிரிகிடா சகா, சாய் பிரியங்கா ரூத் இயல்பாக நடித்திருக்கிறார்கள். போலி சாமியாராக ரோபோ சங்கர், அவரது சீடராக வரலட்சுமி சரத்குமார் சிறிய கதாபாத்திரங்களாக இருந்தாலும் படத்தில் பங்கேற்றிருக்கிறார்கள்.

ஒரே ஷாட் படத்திற்காக மூவரைப் பெரிதாகப் பாராட்டியே ஆக வேண்டும். ஒருவர் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன், மற்றொருவர் கிம்பல் கேமராவைக் கையாண்ட ஆகாஷ், இன்னொருவர் படத்தின் கலை இயக்குனர் ஆர்கே விஜயமுருகன். அவ்வளவு அரங்குகள், அதை விதவிதமாக மிகப் பெருத்தமாக உருவாக்கிய விதம், அதற்கான லைட்டிங்குகள், 94 நிமிடங்களும் கேமராவைக் கையில் பிடித்தபடியே ஒளிப்பதிவு செய்தது என இந்தத் தொழில்நுட்பக் குழு பல விருதுகளுக்கு உரியவர்கள்.

ஏஆர் ரகுமான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் இரவின் நிழலுக்கு நிழலாய் அமைந்திருக்கின்றன.

இன்னும் சிறப்பான ஒரு கதையை வைத்து இந்த சாதனையை உருவாக்கியிருக்கலாமோ என்று மட்டும் ஒரு ஓரம் யோசனை வருகிறது. இருப்பினும் இப்படி ஒரு படத்தைக் கொடுக்க யோசித்து, அதை சிறப்பாக செயல்படுத்தியதற்கு பார்த்திபனுக்கு ஒரு மரம் அளவு ‘பொக்கே’ பார்சல்.