அறிமுக இயக்குனர் ஷியாம் சுந்தர் இயக்கத்தில், அசோக்செல்வன், ஐஸ்வர்யா மேனன், ஜனனி மற்றும் பலர் நடித்து வெளிவந்திருக்கும் படம்.

ஊட்டி மலைப் பின்னணியில் ஒரு த்ரில்லர் கதையைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

காதலி ஐஸ்வர்யா மேனனை தன் கண் எதிரில் யாரோ கடத்திக் கொண்டு போய் கொலை செய்வதைப் பார்க்கிறார் அசோக் செல்வன். தன்னால் காதலியைக் காப்பாற்ற முடியவில்லை என்ற குற்ற உணர்வில் ஐந்து வருடங்களாக இருக்கிறார். காதலியைக் கொன்றவர்களைக் கண்டுபிடித்து பழி வாங்க வேண்டும் என்று காத்திருக்கிறார். அந்தக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தாரா, பழி வாங்கினாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

காதலியைக் கொல்லும் போது அந்தக் குற்றவாளி பேசிய குரல் அடையாளம் மட்டுமே அசோக்கிற்கு மனதில் ஆழமாகப் பதிகிறது. அந்தக் குரல் உடையவரைத்தான் ஐந்து வருடங்களாகத் தேடிக் கொண்டிருக்கிறார். அந்த ஒரே ஒரு க்ளுவை மட்டுமே வைத்து அசோக் செல்வன் கண்டுபிடிக்க முடியுமா என்பதுதான் விறுவிறுப்பான திரைக்கதையாக அமைந்துள்ளது.

ஒருவரை அடையாளம் கண்டபின் திரைக்கதை அப்படியே மாறிப் போகிறது. என்னென்னவோ நடக்கிறது. அவை சுவாரசியமாக இருந்தாலும், கொஞ்சம் குழப்பமாகக் கடப்பதுதான் படத்தின் மைனஸ் பாயின்டாக அமைந்துவிட்டது.

பழி வாங்கும் உணர்ச்சியில் இருக்கும் காதலான அசோக் செல்வன், அன்பான காதலியாக ஐஸ்வர்யா மேனன், பின்னர் அசோக்கைக் காதலிக்கும் ஜனனி மூவருமே அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பாய் நடித்திருக்கிறார்கள். 

படத்தின் ஒளிப்பதிவும், படத் தொகுப்பும் தரமாக அமைந்து ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியைக் கொஞ்சம் சரி செய்திருந்தால் வேழம் இன்னும் வேகமாக அமைந்திருக்கும்.