பட்டாம்பூச்சி – விமர்சனம்

25 Jun 2022

தமிழ் சினிமாவில் வந்துள்ள மற்றுமொரு சீரியல் கில்லரைப் பற்றிய படம். 1989களின் பின்னணியில் அந்த கால கட்டத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர் பத்ரி.

ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும், சீரியல் கொலைகளைச் செய்த கொடூரக் கொலைகாரனுக்கும் இடையிலான மோதல்தான் இந்தப் படம். 

ஒரே ஒரு கொலை செய்தததற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார் ஜெய். ஆனால், பல தொடர் கொலைகளைச் செய்த ‘பட்டாம்பூச்சி’ என்பது நானே என திடீரென தெரிவிக்கிறார். அந்தத் தொடர் கொலைகளைச் செய்தது ஜெய் தானா என்பது குறித்து விசாரிக்க இன்ஸ்பெக்டரான சுந்தர் சி நியமிக்கப்படுகிறார். ஒரு கொலையை மட்டுமே செய்து சிறையில் இருக்கும் ஜெய்தான் அந்தத் தொடர் கொலைகளைச் செய்தாரா இல்லையா என்பதை சுந்தர் சி விசாரிக்க இறங்கிய பின் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவருகிறது. அவை என்ன அவற்றின் முடிவு என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சுந்தர் சி, இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் செம பிட்டாக நடித்திருக்கிறார். தனது மனைவி, குழந்தையை பறி கொடுத்த சோகம் ஒரு புறம் இருந்தாலும் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வேலைக்கு வந்து ஜெய் பற்றிய வழக்கை பரபரப்பாக விசாரிக்கிறார். 

மென்மையான காதல் படங்களில் அதிகம் நடித்த ஜெய், முதல் முறையாக வில்லனாக நடித்திருக்கிறார். கொடூரக் கொலைகாரனாக தன்னை காட்டிக் கொள்ள வித்தியாசமாக நடிக்க முயற்சித்திருக்கிறார். கொடூரக் கொலைகளைச் செய்யும் போது கொடூரனாகவே தெரிகிறார். 

பத்திரிகையாளராக ஹனி ரோஸ், காவலராக இமான் அண்ணாச்சி மற்ற கதாபாத்திரங்களில் முக்கியமானவர்கள்.

நவ்தீப் சுந்தர் பின்னணி இசை பரபரப்பாகவே அமைந்துள்ளது. 80களின் கால கட்டங்களை அப்படியே காட்டியிருக்கிறார்கள்.

பல கொலைகள் பற்றி தெரிய வருவதால்,  இடைவேளை வரை மிகவும் விறுவிறுப்பாக நகர்கிறது கதை. இடைவேளைக்குப் பின் சுந்தர் சி, ஜெய்யின் நேரடி மோதலாக மட்டுமே மாறிவிடுகிறது. 

Tags: pattamboochi, badri, jai, honeyrose, sundar c

Share via: