ரெட்ரோ - விமர்சனம்
01 May 2025
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ஜோஜு ஜார்ஜால் வளர்க்கப்பட்ட சூர்யா, தனது காதலி பூஜா ஹெக்டேவுக்காக வன்முறையை துறந்து அமைதியான வாழ்வைத் தேடுகிறார். ஆனால், அதே காதலியின் பொருட்டு தனது வளர்ப்பு தந்தையின் கையைத் துண்டித்து, அவரது ஆட்களைக் கொல்கிறார். இந்த விபரீதமான செயல்களால் பூஜா அவரை விட்டு விலகிச் செல்கிறாள், சூர்யா சிறைக்குள் அடைக்கப்படுகிறார்.
சிறைக்குப் பிறகு, பூஜா அந்தமானில் இருக்கிறாள் என்று அறிந்த சூர்யா, அவரை மீண்டும் சந்தித்து, அமைதியான வாழ்க்கையைத் தொடங்க தீர்மானிக்கிறார். ஆனால், அந்தமானில் அவருக்காகக் காத்திருப்பது ஒரு பெரிய பொறுப்பும், ஒரு யுத்தமுமாகும். இந்தப் பயணத்தில் சூர்யாவின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதைத்தான் **ரெட்ரோ** மாஸாகவும், கிளாஸாகவும் வெளிப்படுத்துகிறது.
சூர்யா இந்தப் படத்தில் ஒரே கதாபாத்திரத்திற்கு பல முகங்களைச் சேர்த்திருக்கிறார். வளர்ப்பு தந்தைக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் துணிச்சலான மகனாகவும், காதலில் தோல்வியடைந்து ஒரு கொடியவனாக மாறியவராகவும், பின்னர் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராளியாகவும் அவரது நடிப்பு ஒளிர்கிறது. முழுப் படத்தையும் தனது தோள்களில் சுமந்து நிற்கும் சூர்யா, சிரிக்காமல் நடனமாடுவது, ஸ்டைலிஷாக ஆக்ஷன் காட்சிகளை நடத்துவது என பார்வையாளர்களை கண்ணோட்டத்தில் ஆட்கொள்கிறார்.
பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருந்தாலும், கதையின் மையமாக இருந்தபோதிலும், அவரது கதாபாத்திரத்தில் தனித்துவம் குறைவாகவே இருந்தது. இருப்பினும், அவர் தனது பாத்திரத்தை நன்றாக நிரப்பியிருக்கிறார். ஜோஜு ஜார்ஜ் ஒரு பயமுறுத்தும் வில்லனாகத் தோன்றியிருக்கிறார். நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் உள்ளிட்ட துணை நடிகர்கள் தங்கள் பாத்திரங்களில் சிறப்பாக உதவியிருக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணனின் இசை பாடல்களாக ஏற்கனவே ஹிட் ஆகியிருந்தாலும், படத்தில் காட்சிகளுடன் இணைந்து கூடுதலான சுவையைத் தருகிறது. பின்னணி இசை மற்றும் பீஜியங்கள் பார்வையாளர்களை ரெட்ரோ காலத்திற்கு அழைத்துச் செல்கின்றன.
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயஸ் கிருஷ்ணாவின் கேமரா சூர்யா, பூஜா உள்ளிட்ட அனைவரையும் ரெட்ரோ காலத்தவர்களாக நேர்த்தியாகக் காட்டியிருப்பது போலவே, ஆக்ஷன் காட்சிகளை ஸ்டைலிஷாக வடிவமைத்திருக்கிறார். படத்தொகுப்பாளர் ஷாஃபிக் முகமது அலி இரண்டு கதைகளையும் ஒரு சிறிய துணைக் கதையையும் பார்வையாளர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் சேர்த்திருக்கிறார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ரெட்ரோ காலத்தின் மாஸ் ஆக்ஷன் படத்தை இன்றைய நவீனத் திரைப்படத் தயாரிப்புடன் இணைத்து புதிய அனுபவத்தைத் தந்திருக்கிறார். கற்பனைக்கு மீறிய சில காட்சிகள் மட்டும் இவையெல்லாம் எதற்காக என்ற கேள்வியை எழுப்புகிறது. அம்மா செண்டிமெண்ட், கல்ட் சண்டைக் காட்சிகள், தனித்துவமான ஆக்ஷன் காட்சிகள் ஆகியவற்றுடன் பார்வையாளர்களை மகிழ்விக்கும் இந்தப் படம், சூர்யாவின் ரெட்ரோ ஸ்டைல் நடிப்பால் முழுமையாகிறது!
Tags: retro, suriya, pooja hegde, karthik subbaraj