நிழற்குடை – விமர்சனம்

10 May 2025

சிவா ஆறுமுகம் இயக்கத்தில், நரேன் பாலகுமார் இசையமைப்பில், தேவயானி, விஜித், கண்மணி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

இன்றைய காலகட்டத்தில், ஐ.டி. வேலைகளில் இருக்கும் கணவன், மனைவி சிலரது வாழ்வியலை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர். அமெரிக்காவில் போய் ‘செட்டில்’ ஆக வேண்டும், வசதியாக வாழ வேண்டும், தாங்கள் பெற்ற குழந்தைகளைக் கூட கவனிக்க நேரமில்லாமல் வேலை, வேலை  என ஓடிக் கொண்டிருக்கும் ஒரு இளம் தம்பதியினரின் கதை இந்த ‘நிழற்குடை’.

விஜித் இந்து மதத்தைச் சேர்ந்தவர், கண்மணி கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டவர்கள். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இருவருமே வேலைக்குப் போவதால் வீட்டில் இளம் பெண் ஒருவரை குழந்தையைப் பார்த்துக் கொள்ள வைத்துள்ளார்கள். ஆனால், அந்தப் பெண்ணின் தவறான நடத்தையை அறிந்து துரத்தி விட்டுவிடுகிறார்கள். அவருக்குப் பதிலாக ஒரு அனாதை ஆசிரமத்தில் இருக்கும் ஈழத் தமிழ்ப் பெண்ணான தேவயானியை அழைத்து வருகிறார்கள். தேவயானி, அந்தக் குழந்தையை பாசமாக வளர்க்க மூன்று வருடம் போய்விடுகிறது. ஒரு வழியாக விஜித், கண்மணி அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகளை முடிக்கிறார்கள். நாளை அமெரிக்கா செல்ல உள்ள சூழலில் அந்தக் குழந்தை காணாமல் போகிறது. யாரோ கடத்தியிருப்பார்களோ என போலீஸ் விசாரிக்க ஆரம்பிக்கிறது. இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படம் முழுவதும் பெரும்பாலும் ஒரே ஒரு பிளாட்டில் தான் அதிக நேரம் நடக்கிறது. ஆனால், அது தெரியாத விதத்தில் அடுத்தடுத்து உணர்வுபூர்வமான காட்சிகளை நிறைத்து அது தெரியாமல் படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர்.

அமெரிக்கா மோகம் கொண்ட தம்பதியாக விஜித் – கண்மணி இயல்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும் கண்மணியின் நடிப்பில் அவ்வளவு யதார்த்தம். தான் நினைப்பதைச் செய்ய வேண்டும், தனக்குப் பிடித்ததைச் செய்ய வேண்டும் என்ற பிடிவாதம், கணவரின் பாஸிடமே சண்டை போடுவது என இந்தக் கால இளம் ஐ.டி. அம்மாவை கண்முன் நிறுத்தியுள்ளார். காதல் திருமணத்தை ஏற்க மறுத்த பெற்றோர் மீது கோபத்துடன் இருக்கும் விஜித், மனைவியிடம் அவ்வப்போது சண்டை போட்டாலும் பாசமாகவே இருக்கிறார். 

படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக ‘நிழற்குடை’ ஆக நடித்திருப்பவர் தேவயானி. இலங்கைப் போரில் தன் குடும்பத்தைப் பறி கொடுத்து, தமிழ்நாட்டிற்கு அகதியாக வந்து அடைக்கலமானவர். அதே சமயம் ஒரு அனாதை ஆசிரமத்தில் பல வயதானவர்களுக்கு உதவியாக இருந்து தனது அன்பைச் செலுத்துபவர். விஜித், கண்மணியின் குழந்தை போரில் இறந்த தனது குழந்தை போலவே இருந்ததால் ‘கேர் டேக்கர்’ ஆக வர சம்மதிக்கிறார். தேவயானியின் நடிப்பில் அவரது அனுபவம் அன்பாக வெளிப்பட்டுள்ளது. 

விஜித் – கண்மணி குழந்தையாக நடித்துள்ள அஹாசான அஸ்னி அழகாக நடித்துள்ளார்.

நரேன் பாலகுமாரின் இசை, ஆர்பி குருதேவ் ஒளிப்பதிவு, ரோலக்ஸ் படத்தொகுப்பு இந்த நிழற்குடைக்கு இன்னும் கூடுதல் நிழலைத் தந்துள்ளது.

படத்தின் ஆரம்பத்தில் சில காட்சிகளில் ஒரு டிவி சீரியல் போன்ற உணர்வு ஏற்பட்டாலும் போகப் போக ஒரு யதார்த்த சூழலுக்குள் நம்மை இழுத்துச் சென்றுவிட்டார் இயக்குனர். 

Tags: nizhar kudai, devayani, vijeeth, kanmani

Share via: