பராசக்தி – விமர்சனம்
10 Jan 2026
தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வந்தாலும் ஒரு சில படங்கள் மட்டுமே சரியான ஆவணமாக பதிவு செய்யப்பட்டு பல வருடங்களுக்குப் பிறகும் பேசப்படும் ஒரு படமாக அமைகிறது. அப்படியான ஒரு படம் தான் இந்த ‘பராசக்தி’.
1960களில் தமிழ்நாட்டில் திணிக்கப்பட்ட ஹிந்திக்கு எதிராக மாணவ சமுதாயம் வெகுண்டெழுந்து போராடி தங்கள் உயிரையும் கொடுத்து தாய் மொழியைக் காப்பாற்றத் துடித்தது. அந்த தன்னலமற்ற மொழித் தியாகிகளைப் பற்றிய படம்தான் இது.
1959ல் கல்லூரியில் படிக்கும் சிவகார்த்திகேயன் ‘புறநானூற்றுப் படை’ என்ற பெயரில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துகிறார். அப்போது ஒரு ரயிலை தீ வைத்து எரிக்க, அதில் அவரது நண்பன் எதிர்பாராத விதமாக இறந்து போகிறார். அதனால், மனமுடைந்து போராட்டத்தை கைவிடுகிறார். பின்னர் ரயில்வேயில் கரி அள்ளிக் கொட்டும் வேலையில் சேர்ந்துவிடுகிறார். சில வருடங்கள் கடந்து 1965 வருகிறது. அப்போது ஹிந்தியை முழுவதுமாகத் திணிக்க ஒன்றிய அரசு முடிவெடுக்கும் தகவல் வருகிறது.
ஹிந்தி கற்றுக் கொண்டால் டிக்கெட் பரிசோதகர் ஆகலாம் என்ற நிலை வர தங்களது எதிர்வீட்டில் இருக்கும் எம்.பி.யின் மகளான ஸ்ரீலீலாவிடம் ஹிந்தி கற்க ஆரம்பிக்கிறார் சிவகார்த்திகேயன். அதே சமயம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படிக்கும் சிவகார்த்திகேயனின் தம்பி அதர்வா, ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தனது நண்பர்களுடன் தீவிரமாக ஈடுபடுகிறார். அவர்களது போராட்டத்தில் ஸ்ரீலீலாவும் இருக்கிறார். ஹிந்தியை அமல்படுத்த நினைக்கும் மாநில முதல்வர் கலந்து கொள்ளும் விழாவில் கருப்புக் கொடி காட்ட முயல்கிறது அதர்வா குழு. அந்த சமயத்தில் நடக்கும் தடியடியில் இறங்கி அவர்களைக் காப்பாறறுகிறார் சிவகார்த்திகேயன். அப்போதுதான் சிவகார்த்திகேயன் தான் ‘புறநானூற்றுப் படை’ தலைவன் என்ற உண்மை அதர்வா குழுவுக்குத் தெரிய வருகிறது. இவர்களது போராட்டத்தை அடக்கும் சிறப்பு போலீஸ் அதிகாரியாக இருக்கும் ரவி மோகன், போராட்டத்தை அடக்கி, ஒடுக்க நினைக்கிறார். அவரையும், ஆளும் அரசையும் எதிர்த்து மாணவர் போராட்டம் தீவிரமடைகிறது. அதன் முடிவு என்ன என்பதுதான் மீதிக் கதை.
தமிழ், தமிழ் என மொழி உணர்வுடன் இங்கு பேசிய எத்தனையோ தமிழ் இயக்குனர்கள் படமாக்க முயலாத ஒரு கதையை சுதா கொங்கராக பல தடங்கல்களுக்குப் பிறகு படமாக்கி இந்தப் படத்தை இன்றைய தலைமுறைக்கு சரியான நேரத்தில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். இன்றைய ‘தற்குறிகள்’ பலரும் தவறாமல் பார்க்க வேண்டிய ஒரு படம். நம் மூத்தோர்களின் பலரது போராட்டம்தான் இன்றைய நமது நிம்மதியான வாழ்க்கைக்குக் காரணம் என்பதை அவர்கள் உணர வேண்டும். சொல்ல வந்த கருத்தை ஆணித்தரமாகப் பதிவு செய்திருக்கிறார் சுதா, வாழ்த்துகள்.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்த சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படம் அவரது 25வது படம். திரையுலகப் பயணத்தில் அவருக்கென ஒரு மாபெரும் தடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் படம். இப்படி ஒரு கதையை, கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்ற துணிச்சல், ஆர்வம் ஆகியவற்றிற்கு தனி பாராட்டுக்கள். செழியன் கதாபாத்திரத்தில் கோபம், தவிப்பு, காதல், பாசம் என அனைத்து உணர்வுகளையும் சரியாக வெளிப்படுத்தியுள்ளார். பீரியட் கதாபாத்திரங்களில் நடிக்கும் போது ஓவர் ஆக்டிங் வெளிப்படாத ஒரு நடிப்பு வேண்டும். அதை கவனத்தில் கொண்டு சரியான மீட்டரில் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார்.
அந்தக் கால தமிழ் சினிமா ஹீரோயின்கள் வசதியான குடும்பத்துப் பெண்ணாகவே அதிகம் காட்டப்படுவார்கள். அப்படியான ஒரு கதாபாத்திரமாகத்தான் ஸ்ரீலீலாவின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி எம்.பி.யின் மகள். அப்பாவின் கட்சியை எதிர்த்தே ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மகளிர் பிரிவின் செயலாளராக இருப்பவர் ஸ்ரீலீலா. அந்தக் கால சரோஜாதேவியின் நடிப்பை ஞாபகப்படுத்தி ரசிக்க வைக்கிறார். அறிமுகப்படமே அசத்தலான படமாக அமைவது அபூர்வம். அது ஸ்ரீலீலாவுக்கு அமைந்துவிட்டது.
அதர்வா கதாபாத்திரம் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் இடம் பிடிக்கும் ஒரு கதாபாத்திரம். கொஞ்ச நேரமே வந்து மனதைக் கவரும் சில நடிகர்களை பெரிய ‘மௌன ராகம்’ கார்த்திக் என நினைப்பு என்று சொல்வார்கள். இனி, அது ‘பராசக்தி’ அதர்வா என மாற வாய்ப்புள்ளது. அந்த வயதுக்கேயுரிய வேகம், துள்ளல், போராட்ட குணம் அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டார் அதர்வா. அருமை, அருமை.
கதாநாயகனாக தனிப் பெயரை எடுத்துவிட்ட காலத்தில் மிரட்டல் வில்லனாக நடிக்க சம்மதிப்பதற்கும் பெரிய மனம் வேண்டும். அதுவும் தமிழ் மொழிக்கு எதிரான ஒரு கதாபாத்திரம். என்ன நடந்தாலும் பரவாயில்லை அதை ஒரு கதாபாத்திரமாகவே பார்க்கிறேன் என நினைத்து நடித்திருக்கிறார் ரவி மோகன். ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை’க்கு நிகரான ‘பொள்ளாச்சி படுகொலை’ என்று சொல்லுமளவிற்கு ஜெனரல் டயர் போல கொடுமைக்காரனாக நடித்திருக்கிறார். பாலியல் குற்றத்தால் பெயர் கெட்டுப் போன பொள்ளாச்சியின் பெயரை இந்தப் படம் மாற்றும்.
மேலிடம் சொல்வதை எந்த எதிர்ப்பும் சொல்லாமல் ஏற்றுக் கொள்ளும் அப்போதைய சென்னை மாகாண முதல்வராக பிரகாஷ் பெலவாடி, கொஞ்சமே வந்தாலும் தீயை பரவ வைத்த அண்ணாதுரை கதாபாத்திரத்தில் நடித்த சேத்தன், சிவகார்த்திகேயனின் நண்பனாக நடித்த பிருத்வி ராஜன், சிவகார்த்திகேயனின் பாட்டியாக நடித்த குலப்புள்ளி லீலா உள்ளிட்டவர்களும், இதர சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் அவரவர் நடிப்பில் பேச வைத்துள்ளார்கள்.
ஜிவி பிரகாஷ் இசையில் வந்துள்ள 100வது படம். பின்னணி இசையில் படத்தின் உணர்வுகளை நமக்குள் இன்னும் அதிகமாகக் கடத்துகிறார். பாடல்கள் படத்தில் தேவையில்லை என்றாலும் இன்றைய ரசனைக்குத் தேவைப்படுகிறது. அடி அலையே…காதல் பாடல் காதில் ரீங்காரமிடுகிறது. ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு அந்தக் காலத்தை அழகான பதிவாய் பதிவு செய்துள்ளது. அண்ணாதுரையின் அரங்க அமைப்பு, நிறைய உழைப்பைக் கொட்டியுள்ளது. சதீஷ் சூர்யாவின் படத் தொகுப்புக்கும் பாராட்டுக்கள். வசனம் எழுதியவர்களுக்கு தனி பாராட்டு.
படத்தின் ஆரம்பத்தில் படத்திற்குள் நுழைய நமக்குக் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக நுழைய வைத்து அப்படியே மொழி உணர்வுகளால் வேறு தளத்திற்குக் கொண்டு சென்றுவிடுகிறார்கள்.
தாயை மதிப்பவர்களும், தாய் மொழியை மதிப்பவர்களும் பார்க்க வேண்டிய படம் ‘பராசக்தி’.
Tags: parasakthi, sivakarthikeyan, sudha kongara, ravi mohan, atharva, sree leela, gv prakashkumar

