அனந்தா - விமர்சனம்
14 Jan 2026
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2026-ல் வெளியான 'அனந்தா' திரைப்படம், புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் அற்புதங்களையும், அவரது பக்தர்களின் வாழ்க்கை அனுபவங்களையும் மையமாகக் கொண்ட ஆன்மீகப் படமாக அமைந்துள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இப்படம், பக்தி மற்றும் தெய்வீகத்தை வலியுறுத்தும் கதைகளின் தொகுப்பு. ‘அண்ணாமலை, பாட்ஷா’ போன்ற ஆக்ஷன் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, இம்முறை ஆன்மீகப் பாதையில் பயணித்துள்ளார். பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உருவான இப்படம், பக்தர்களுக்கு ஒரு உணர்ச்சிகரமான அனுபவமாக இருக்கும்.
புட்டபர்த்தி மருத்துவமனையில் தொடங்கும் கதை, சத்ய சாய்பாபாவின் இறுதி அழைப்பின் பேரில் ஐந்து பக்தர்களை ஒன்றிணைக்கிறது. மும்பை தொழிலதிபர், பாலக்காட்டு முதியவர், காசி வாழ் தாய், சென்னை நடனக் கலைஞர், அயல்நாட்டு தம்பதி என வெவ்வேறு பின்னணியில் இருந்து வரும் இவர்கள், தங்கள் வாழ்க்கையில் பாபாவின் அற்புதங்கள் எப்படி தெய்வீகத் தலையீடாக அமைந்தன என்பதைப் பகிர்கின்றனர். உணர்ச்சிகரமான சம்பவங்களுடன் கூடிய இந்தக் குறும் கதைகள், அவர் மீதான நம்பிக்கையின் வலிமையை விவரிக்கின்றன.
ஒய்.ஜி. மகேந்திரன் தனது பாலக்காட்டு தம்பதி கதையில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மனைவியை இழந்த சோகம், தனிமை, பின்னர் வரும் திருப்பம் என உணர்வுபூர்வமாக நடித்துள்ளார் ஒய்ஜி மகந்திரன். அவரது மனைவியாக ஸ்ரீரஞ்சனி இயல்பாக நடித்துள்ளார். சுஹாசினி, உணர்ச்சிகரமாக அவரது மேக்கப்பும், நடிப்பும் சற்றே ஓவராக உள்ளது. ஜெகபதி பாபு தொழிலதிபர் வேடத்தில் பொருத்தமாக இருக்கிறார். ஆனால், அவரே சொந்தக் குரலில் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அபிராமி வெங்கடாசலம் நடனக் கலைஞராக உணர்ச்சிகரமான தருணங்களை அளிக்கிறார். புட்டபர்த்தியில் பொறுப்பாளராக இருக்கும் நிழழ்கள் ரவி அமைதியான நடிப்பில் கவர்கிறார்.
தேவாவின் இசை பாடல்களிலும், பின்னணியிலும் பக்தி மணத்தைப் பரப்புகிறது. சஞ்சயின் ஒளிப்பதிவு புட்டபர்த்தி, காசி போன்ற இடங்களை தத்ரூபமாகக் காட்டுகிறது. படத்தொகுப்பு மென்மையாக இருந்தாலும், சில இடங்களில் நீளம் தெரிகிறது. திரைக்கதை முதலில் மெதுவாகத் தொடங்கினாலும், கதைகள் விரியும் போது ஆர்வம் ஏற்படுத்துகிறது.
'அனந்தா', சத்ய சாய்பாபா பக்தர்களுக்கும், ஆன்மீகக் கதைகள் விரும்புபவர்களுக்கும் ஏற்ற படம். உணர்ச்சிகரமான தருணங்கள் இருந்தாலும், போதனைத் தன்மை சில இடங்களில் இயல்பை இழக்கச் செய்கிறது.
Tags: anantha, suresh krishna

