பாலன், தி பாய் - விமர்சனம்

20 Jun 2026

சிதம்பரம் இயக்கத்தில், மஞ்சுமல் பாய்ஸ் வெற்றிக்குப் பிறகு வெளியாகியுள்ள ‘பாலன்’ ஒரு சாதாரணமான கதையை அசாதாரணமான உணர்வுகளுடன் சொல்லும் படைப்பு. தாய்-மகன் உறவின் ஆழமான பிணைப்பு, நம்பிக்கையிழப்பு, பயம், மற்றும் மீண்டும் சேரும் ஆசை ஆகியவற்றை மையப்படுத்திய இப்படம், திரைக்கதையின் எளிமையை வைத்துக்கொண்டே பார்வையாளர்களை முழுமையாக ஈர்க்கும் திறன் கொண்டது.

சிறை தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கும் கர்ப்பிணிப் பெண் ஃபர்சானா பலதிங்கல், சிறையிலேயே தன் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். விடுதலையான பிறகு, கடந்தகால வலிகளால் யாரையும் நம்ப முடியாத நிலையில், தன் மகனுடன் பல்வேறு பெயர்களில், பல இடங்களில் அலைந்து திரிகிறார். ஒரு தனியாக வசிக்கும் மூதாட்டியைப் பராமரிக்கும் வேலை கிடைக்க, அங்கேயே நிரந்தரமாகத் தங்க முடிவெடுத்து, மகனைப் பள்ளியில் சேர்க்கிறார்.

பாதுகாப்பான வாழ்க்கை கிடைத்தாலும், அவர் எப்போதும் ஒரு வித அச்சத்துடனேயே இருக்கிறார். பள்ளியிலிருந்து வரும் மகனை ஒரு குறிப்பிட்ட இடத்தில் காத்திருக்கச் சொல்லி, “எவ்வளவு நேரம் ஆனாலும் அங்கேயே இரு, அம்மா நிச்சயம் வருவேன்” என்று உறுதியளிக்கிறார். ஒரு நாள் மகன் அந்த இடத்தில் நீண்ட நேரம் காத்திருக்க, அம்மா வரவில்லை. இறுதியில் பொதுமக்கள் அவனை காவல்துறையிடம் ஒப்படைக்கின்றனர். இந்தப் பிரிவுக்குப் பிறகு அம்மாவும் மகனும் மீண்டும் சேர்ந்தார்களா? ஃபர்சானாவுக்கு என்ன நேர்ந்தது? என்பதை உணர்வுபூர்வமாகச் சொல்லும் பயணம்தான் ‘பாலன்’.

நாயகியாக நடித்த ஃபர்சானா பலதிங்கல், வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உள்ளார்ந்த போராட்டத்தையும், தொடர் அச்சத்தையும் தன் கண்களால் மட்டுமே அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். எப்போதும் குற்ற உணர்வும் பயமும் கலந்த அவரது எதார்த்தமான நடிப்பும் திரை இருப்பும் படத்துக்கு பெரும் வலிமை சேர்த்திருக்கிறது.

சிறுவன் பாலனாக நடித்த ஆதிசேஷன் கே.ஆர்., அம்மாவுக்கு இணையாகத் தன் உணர்வுகளை கண்களால் சொல்லியிருக்கிறார். எங்கும் தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் மவுனமாக இருந்தாலும், தாயின் தேடலையும் ஏமாற்றத்தையும் மிக இயல்பாகக் காட்டி ரசிகர்களை ஈர்க்கிறார். வளர்ந்த பாலனாக வந்த ஜினன், அம்மாவைத் தேடும் பயணத்தில் உணர்ச்சிகரமான நடிப்பை வழங்கியிருக்கிறார். காவலராக நடித்த ஜீன் பவுல் லால், பழிவாங்கும் உணர்வை இயல்பாகவே வெளிக்காட்டி கவனம் பெற்றிருக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் வந்த டோவினோ தாமஸின் திரை இருப்பும் தனித்துவமான தோற்றமும் படத்துக்கு கூடுதல் ஆழம் சேர்த்திருக்கிறது. கிரிஷ் ஏ.டி. உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு மிகவும் பொருத்தமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித், முக்கிய கதாபாத்திரங்களின் மனநிலைக்கு ஏற்றவாறு அமைதியான காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார். இடங்களை ஒரு கதாபாத்திரமாகவே உயிர்ப்புடன் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது. சுஷின் ஷாம் இசை, காட்சிகளின் உணர்ச்சி அடர்த்தியையும் பரபரப்பையும் இன்னும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.

எளிமையான கதை என்றாலும், ஆரம்பத்திலிருந்தே பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துவிடும் வித்தையை படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் அழகாகச் செய்திருக்கிறார். கதையாசிரியர் ஜித்து மாதவன், போகும் இடம் தெரியாத ஒரு பயணத்தையும் அதில் நிகழும் பிரிவையும் மிகவும் உணர்வுபூர்வமாக எழுதியிருக்கிறார். பரபரப்பான திரைக்கதை மூலம் ரசிகர்களின் கவனத்தை முழுமையாகப் பிடித்துவிடுகிறார்.

மொத்தத்தில், ‘பாலன்’ துவக்கம் முதல் இறுதி வரை இறுக்கமான கதாபாத்திரங்களுடனும் அமைதியான சூழல்களுடனும் பயணித்தாலும், எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக நகர்கிறது. தாய்-மகன் உறவின் நுட்பமான உணர்வுகளை அழகாகப் படம் பிடித்திருக்கும் இப்படம், சிதம்பரத்தின் இயக்கத்தில் மற்றொரு வெற்றிப் பயணமாக அமைந்திருக்கிறது. உணர்வுகளை ரசிக்க விரும்புபவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் படைப்பு.

Tags: balan the boy

Share via: