மனைவிக்கும் முக்கியத்துவம் தரும் ‘கட்டா குஸ்தி 2’
17 Jun 2026
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் ‘கட்டா குஸ்தி 2’ படத்தில், முதல் பாகத்தில் நடித்த நடிகர்களுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பல புதிய நடிகர்களும் இணைந்துள்ளனர். செல்லா அய்யாவு இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவில், பரத் விக்ரமன் படத்தொகுப்பில், ஜெயச்சந்திரன் கலை இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
‘கட்டா குஸ்தி’ படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள ‘கட்டா குஸ்தி 2’ ஆக்ஷன், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர், சைக்கோ திரில்லர், அறிவியல் கற்பனை, நகைச்சுவை என பல வகைகளை இணைத்து வெற்றி பெற்ற முதல் பாகத்தின் இரண்டாம் பாகமாக அமைந்துள்ளது. இன்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து படம் குறித்த சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்தனர்.
இயக்குநர் செல்லா அய்யாவு பேசுகையில், “முதலில் இரண்டாம் பாகம் எடுக்கும் யோசனை இல்லை. விஷ்ணு விஷால் என்னிடம் கேட்டபோதுதான் இது சாத்தியம் என்று தோன்றியது. என்னிடம் இருந்த ஒரு கருத்தைச் சொன்னேன். இருவரும் அரை மணி நேரம் விவாதித்தோம். அதிலிருந்துதான் இந்தப் படம் உருவானது.
முதல் பாகத்தில் உள்ள பல விஷயங்கள் இதிலும் இருக்கும், ஆனால் முற்றிலும் வித்தியாசமான விதத்தில். முதல் பாகத்தில் ஐஸ்வர்யா லட்சுமி பற்றிய விவரங்கள் தெரியாமல் இருப்பது இடைவேளையில் பெரிய திருப்பமாக அமைந்தது. இந்தப் படத்திலும் அப்படி ஒரு திருப்பம் இருக்கிறது. படம் பார்க்கும்போதுதான் தெரியும்” என்றார்.
நடிகர் விஷ்ணு விஷால் பேசுகையில், “என் பல வெற்றிப் படங்களுக்கு இரண்டாம் பாகம் எடுக்க முடியவில்லை. கதை சொல்லும்போது இரண்டாம் பாகம் இருக்கும் என்று சொல்வார்கள், ஆனால் சில காரணங்களால் முடியாமல் போய்விடும். ‘ராட்சசன்’, ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ போன்ற படங்களுக்கு இரண்டாம் பாகம் தேவைப்பட்டது. எஃப்.ஐ.ஆர் படமும் இரண்டு பாகமாக எடுக்க திட்டமிடப்பட்டது. அதனால்தான் ஒரு படத்தின் தொடர்ச்சியை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று நினைத்து செல்லாவுடன் பேசி இதைச் செய்தோம். அரை மணி நேர உரையாடலில்தான் இந்தக் கதை உருவானது” என்றார்.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில், “நடிகையாக இருப்பது எனக்கு கிடைத்த வரம் என்றே நினைக்கிறேன். கட்டா குஸ்தி போன்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என் புண்ணியம் என்று கருதுகிறேன். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. கதை கேட்டபோதே இதைத் தவறவிடக் கூடாது என்று தோன்றியது. இப்போது ‘கட்டா குஸ்தி 2’ கிடைத்திருப்பது பெரும் பாக்கியம். முதல் பாகம் போலவே இதிலும் கதை என்னை மையப்படுத்தியே நகர்கிறது. நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்” என்றார்.
பெண்ணை மையப்படுத்திய படங்களில் நடிப்பது ஏன் என்ற கேள்விக்கு விஷ்ணு விஷால் பதிலளிக்கையில், “இந்தக் கேள்விக்கு ஏற்கனவே பதில் சொல்லியிருக்கிறேன். என் தந்தை மிகவும் கஷ்டப்பட்டு படித்து ஐபிஎஸ் ஆனார். என் அக்கா சிறப்பாகப் படித்து உலகளவில் முக்கிய வங்கியில் உயர் பொறுப்பில் இருக்கிறார். அவரது முன்னேற்றத்திற்குப் பிறகுதான் குடும்பம் முன்னேறியது. என் சினிமா பயணத்திலும் அவர் தான் பெரும் ஆதரவு. இந்தப் படத்தில் இணை தயாரிப்பாளராக அவரது பெயர் (சுப்ரா) வரும்.
என் அம்மா குடும்பத்தை பொறுப்புடன் கவனித்துக்கொண்டார். அப்பா காவல்துறை அதிகாரி என்பதால் அடிக்கடி இடம் மாறினோம். அம்மாதான் குடும்பத்தை பார்த்துக்கொண்டார். என் வாழ்க்கையில் பெண்களின் பங்கு மிக முக்கியம். எனவே பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறேன்.
‘கட்டா குஸ்தி 2’ பெண்கள் இப்படி செய்யலாமா, ஆண்கள் இப்படி இருக்கலாமா என்ற பழைய முறையை உடைக்கும் படமாக அமையும். முதல் பாகத்திலிருந்து அனைத்தும் நேர்மாறாக இருக்கும். மனைவியை தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற வைக்க ஆசைப்படும் கணவர், அதற்காக என்னென்ன செய்கிறார், அதனால் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை. எதிர்பாராத சில விஷயங்களை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறோம்” என்றார்.
காமெடி ஜானர் எளிதாக இருந்ததா என்ற கேள்விக்கு விஷ்ணு விஷால், “காமெடி தான் மிகவும் கடினம். செண்டிமெண்ட், ஆக்ஷன் போன்றவற்றை எளிதாகச் செய்துவிடுவேன். நகைச்சுவைக்கு டைமிங் மிக முக்கியம். தவறினால் அது காமெடியாக இருக்காது, போரடிக்கும். மக்கள் தங்கள் கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருக்கத்தான் திரைப்படம் பார்க்கிறார்கள். எனவே இப்படிப்பட்ட படங்கள் அதிகம் வெளியாக வேண்டும். வருடத்துக்கு ஒரு முறை காமெடி படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறேன்” என்றார்.
முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கிறதா என்ற கேள்விக்கு விஷ்ணு விஷால், “நிச்சயமாக இருக்கிறது. என் படங்களில் அதிக லாபம் தந்த மற்றும் பெரிய வியாபாரம் ஆன படம் இதுதான். ஐசரி கணேஷ் சார் படம் பார்த்துவிட்டு ‘என் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான படங்களில் இதுதான் சிறந்த படம்’ என்று சொன்னார். வியாபார அளவில் அவருக்கு பெரிய லாபம் கிடைத்திருக்கிறது. முதல் பாகம் வெற்றி என்பதால் இரண்டு மடங்கு பட்ஜெட்டில் எடுக்கவில்லை, நியாயமான பட்ஜெட்டிலேயே தயாரித்தோம். அதற்கு கிடைத்த லாபம் மிகப்பெரியது. என் படங்களில் அதிக வியாபாரம் மற்றும் மிகப்பெரிய லாபம் ஈட்டிய படம் ‘கட்டா குஸ்தி 2’ தான்” என்று உற்சாகமாகத் தெரிவித்தார்.
Tags: gatta kusthi 2, vishnu vishal, aishwarya lekshmi
